சுகோய் போர் விமானத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பொருத்தும் பணி துவக்கம்

உலகின் அதிவேகமான ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை, இந்திய விமானப் படையைச் சேர்ந்த சுகோய் விமானங்களில் பொருத்துவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேகமான ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை, இந்திய விமானப் படையைச் சேர்ந்த சுகோய் விமானங்களில் பொருத்துவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
விண்ணிலிருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையின் புதிய ரகம் கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அதிநவீன சுகோய்-30 விமானத்திலிருந்து ஏவி, அந்த ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து, 40 சுகோய் போர் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தப் பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழலில், அதிவேக சுகோய் விமானங்களை ஏந்திய அதி நவீன போர் விமானங்கள் இந்திய விமானப் படைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
இதற்காக, அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தொழில்கூடத்தில் சுகோய் விமானத்தில் மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன.
இந்தப் பணிகளுக்கான காலத் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது. 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிகள் நிறைவடைந்துவிடும் என்று தெரிகிறது.
பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு, கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் எதிரி நாடுகளின் எவ்வளவு பெரிய தாக்குதலையும் எதிர்கொள்ளும் இந்திய விமானப் படையின் திறன் பல மடங்கு அதிகரிக்கும்.
போர் மூளும்போது இரு எதிரி நாடுகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய விமானப் படைக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் வரப்பிரசாதமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பான 2.5 டன் எடை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணைகள், ஒலியை விட 2.8 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கக் கூடியவை. 290 கி.மீ. தூரம் வரை இந்த ஏவுகணைகள் பாயக் கூடியவை.
சர்வதேச அளவிலான ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) இந்தியா கடந்த ஆண்டு இணைந்ததையடுத்து, இந்த ஏவுகணைகளின் பாய்ச்சல் தூரத்தை 400 கி.மீ. வரை அதிகரிக்க முடியும் என்பது 
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com