தவறாக போலீஸாரால் கைது செய்யப்படுவோருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் சட்டம்

போலீஸாரால் தவறாக கைது செய்யப்படுவோருக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

போலீஸாரால் தவறாக கைது செய்யப்படுவோருக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போது போலீஸாரால் தவறாக கைது செய்யப்படும் நபர்கள் அதிக அளவில் பாதிப்பை சந்திப்பதாகவும், அவர்களுக்கு சட்ட ரீதியில் உதவிகள் செய்து தரப்படுவதில்லை என தில்லி உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் உதவி செய்வதற்காக தேசிய சட்ட பல்கலைக்கழக பதிவாளரும், பேராசிரியருமான ஜி.எஸ். பாஜ்பாய் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அளித்த அறிக்கையில், அமெரிக்காவிலுள்ள 32 மாகாணங்களில் போலீஸாரால் தவறாக கைது செய்யப்படும் நபர்களுக்கு நிதி மற்றும் நிதி சாராத பிற இழப்பீட்டை வழங்க வகை செய்யும் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 
இதேபோல், பிரிட்டன், நியூஸிலாந்து நாடுகளிலும் சட்டங்கள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அதையும் தில்லி உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தது. இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் இல்லாததையும், அதேநேரத்தில் 
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பல தீர்ப்புகளில் போலீஸாரின் தவறான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருப்பதையும் தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் போலீஸாரின் தவறான நடவடிக்கையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவும் நோக்கில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் வகையில் 
சட்டம் கொண்டு வருவது குறித்து பரிந்துரைக்க வேண்டும் என்று சட்ட ஆணையத்தை தில்லி உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.
இதையடுத்து, இந்தியாவில் போலீஸாரின் தவறான நடவடிக்கையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு அளிக்கும் வகையில் சட்டத்தை உருவாக்குவது குறித்து சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இதுதொடர்பான பரிந்துரையை மத்திய அரசிடம் சட்ட ஆணையம் அளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com