வங்கதேசத்தில் இந்திய தீவிரவாத முகாம்கள் பெரும்பாலானவை அழிப்பு: பிஎஸ்எஃப்

வங்கதேசத்தில் இந்தியாவைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களின் பெரும்பாலான முகாம்கள் அழிக்கப்பட்டு விட்டன என்று எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இந்தியாவைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களின் பெரும்பாலான முகாம்கள் அழிக்கப்பட்டு விட்டன என்று எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவு எல்லையில், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினர்(பிஎஸ்எஃப்) கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதேபோல், வங்கதேசப் பகுதியில் இருந்து வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இரு நாட்டு பாதுகாப்புப் படைகளின் ஒத்துழப்புடன் வங்கதேச மண்ணில் முகாமிட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, பிஎஸ்எஃப் இயக்குநர் கே.கே.சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து வங்கதேச எல்லைக்குள் தீவிரவாத குழுக்கள் ஊடுருவியதாகத் தகவல் கிடைக்கும்போதெல்லாம், அந்தத் தகவல்களை வங்கதேசத்துடன் உடனடியாகப் பகிர்ந்துவிடுவோம். வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் உடனடியாக அதிரடி வேட்டையில் ஈடுபடத் தொடங்குவர். 
அதன் பலனாக, வங்கதேசத்தில் உள்ள தீவிரவாத குழுக்களின் பல பயிற்சி முகாம்களும், பல்வேறு மறைவிடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதால், இவை சாத்தியமாகியுள்ளன. 
கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து, இந்திய-வங்கதேச எல்லையில் தீவிரவாத ஊடுருவல், குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக, இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில், இந்திய - வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படைகளின் இயக்குநர்கள் அளவிலான கூட்டங்கள் நடைபெறும்போது, இந்திய தீவிரவாத குழுக்கள் பற்றிய விவரங்களை வங்கதேசத் தரப்பிடம் இந்தியத் தரப்பு அளிக்கும். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தீவிரவாத குழுக்கள் ஓரிடத்தில் முகாமிட்டு தங்க முடியாத அளவுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com