முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

முத்தலாக் தடை மசோதா, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. 
முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகளில் பாதுகாப்பு) மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவைகளுக்கு இடையேயான குழு உருவாக்கியது. 

இதையடுத்து, மாநிலங்களின் ஒப்புதலுக்காக அதை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதைத் தொடர்ந்து, தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க உடனடி முத்தலாக் நடைமுறையை சிலர் கடைப்பிடித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த நடைமுறையை சட்டவிரோதம் என்று அறிவித்தது. எனினும், அந்த நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன.

இதைக் கருத்தில் கொண்டு, உடனடி முத்தலாக் நடைமுறைக்கு சட்டரீதியில் தடை விதிக்கும் வகையிலும், அதை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தை அணுகி தனக்கும், தனது வாரிசுக்கும் நிவாரணம் பெற்றுத் தர கோரிக்கை விடுக்கும் வகையிலும், வரைவு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. 

இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் அறிமுகம் செய்தார். இதையடுத்து இந்த மசோதா மீதான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com