பாகிஸ்தான் மனிதாபிமானமற்றது: குல்பூஷண் சந்திப்பு குறித்து நாடாளுமன்றத்தில் சுஷ்மா விளாசல்

குல்பூஷண் ஜாதவின் தாய் மற்றும் மனைவிக்கு விதவைக் கோலம் ஏற்படுத்தியது பாகிஸ்தான் என சுஷ்மா ஸ்வராஜ் கடுமையாகச் சாடினார்.
பாகிஸ்தான் மனிதாபிமானமற்றது: குல்பூஷண் சந்திப்பு குறித்து நாடாளுமன்றத்தில் சுஷ்மா விளாசல்

பாகிஸ்தானால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை (47), அவரது தாயார் அவந்தி, மனைவி சேதன்குல் ஆகியோர் டிசம்பர் 25-ந் தேதி சந்தித்துப் பேசினர். உணர்ச்சிகரமான இச்சந்திப்பு கண்ணாடி தடுப்புக்கிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தில்லியில் இருந்து துபை வழியாக இஸ்லாமாபாத் சென்ற அவர்கள் இருவரும், அங்குள்ள இந்தியத் தூதரகத்துக்கு முதலில் சென்றனர். அங்கு சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

குல்பூஷண் ஜாதவ் தனது தாய் மற்றும் மனைவியுடன் "இன்டர்காம்' தொலைபேசியில் உரையாடினார். பாகிஸ்தானால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பிறகு, குல்பூஷணை அவரது தாயாரும், மனைவியும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வியாழக்கிழமை பேசியதாவது:

பாகிஸ்தானின் இந்த சந்திப்பு வெறும் நாடகம் என்னும் உண்மை இப்போது வெளிச்சமாகியுள்ளது. ஒரு பெண் என்றும் பாராமல் அவரின் உடை மற்றும் காலணிகளை மாற்றியுள்ளனர். மேலும், அவர்களின் தாலியும் அகற்றப்பட்டு, நெற்றியிலிருந்த பொட்டும் அழிக்கப்பட்டு அவர்களுக்கு விதவைக் கோலத்தை பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ளது.

இது மனிதாபிமானமற்ற கொடூரச் செயலாகும். இந்த சம்பவத்தால் ஒருவரின் தனிமனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

காலணியில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று பாகிஸ்தான் கூறும் பதிலை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்கள் இருவரும் இங்கிருந்து துபை வரை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தாலும், துபையில் இருந்து பாகிஸ்தானுக்கு எமிரேட்ஸ் விமானத்தின் மூலமாகவே பயணித்தனர். 

ஒவ்வொரு விமானநிலையங்களிலும் அனைத்து பயணிகளையும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர். அவ்வாரு இருக்கையில் உளவு பார்க்கும் வசதி கொண்ட காலணிகள் அதில் சுலபமாக தெரியவந்திருக்கும். 

இதிலிருந்தே பாகிஸ்தானின் இந்த இரட்டை முகம் வெளிப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அரசு கூறிய தேதியில் தான் இந்த சந்திப்பும் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது ஊடகங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி, அவர்கள் நாட்டின் ஊடகங்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.

மேலும், குல்பூஷணை சந்தித்த பின்னர், பேட்டியெடுத்த செய்தியாளர்கள் அவர் குற்றவாளி என்பது போன்று பரப்புரைகளை மேற்கொண்டனர். மேலும், இதனை அவரது தாய் மற்றும் மனைவியிடமும் கூறி மனஅழுத்தம் கொடுத்துள்ளனர்.

மொத்தத்தில் குல்பூஷண் ஜாதவின் தாய் மற்றும் மனைவிக்கு இந்த சந்திப்பு முழுவதும் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மனரீதியிலான அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது என்றார்.

முன்னதாக, ஈரான் வழியாக பலூசிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி, அந்நாட்டுக்கு எதிரான சதிவேலையில் ஈடுபட்டதாக குல்பூஷணை பாகிஸ்தான் போலீஸார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது.

எனினும், இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது. அதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற கடந்த மே மாதம் இடைக்காலத் தடை விதித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com