பெங்களூருவில் 2018 புத்தாண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி

2018 புத்தாண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்க பெங்களூரு மேயர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் 2018 புத்தாண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி

பெங்களூருவில் மாநகராட்சி சார்பில் மொத்தம் 32 பொது சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 26 மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவப் பிரிவு உள்ளது.

இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனையில் வருகிற 2018 புத்தாண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி மேயர் ஆர்.சம்பத் ராஜ், வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூரு மேயர் ஆர்.சம்பத் ராஜ் கூறியதாவது:

2018 புத்தாண்டில் ஜனவரி 1-ந் தேதி பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கான இளநிலை பட்டப்படிப்பு கல்வி வரை இலவசமாக வழங்கப்படும். 

இதற்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவுக்குப் பின்னர் ஜனவரி 1-ந் தேதி பிற்பகலுக்குள்ளாக அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளின் நேரத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

இதில் குறிப்பாக சுகப்பிரசவ முறையில் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

பொதுவாக இதுபோன்று பொது மருத்துவமனைகளுக்கு வரும் தாய்மார்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். எனவே அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தையின் எதிர்காலம் பாரமாக தெரியக்கூடாது என்பதற்காகவே இதைச் செய்கிறோம்.

பெண் குழந்தை பெற்றெடுக்கும் ஏழைத் தாய்மார்களுக்கு பெண் குழந்தையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் பெங்களூரு மாநகராட்சி மேயர் மற்றும் அந்த முதல் குழந்தை ஆகியோர் இணைந்த வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும். அதிலிருந்து வரும் வட்டி கல்விச் செலவுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com