மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரத்தின் 10 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை மும்பையில் பட்டாசு வெடித்து கொண்டாடும் பாஜகவினர்.
மகாராஷ்டிரத்தின் 10 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை மும்பையில் பட்டாசு வெடித்து கொண்டாடும் பாஜகவினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 8-இல் வெற்றி பெற்றிருப்பதால் மாநிலத்தின் உள்ளாட்சி அதிகாரம் பாஜகவின் வசம் சென்றுள்ளது.
இந்த தேர்தலில் தாணே மாநகராட்சியை மட்டும் சிவசேனை கைப்பற்றியுள்ளது; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிருஹன் மும்பை மாநகராட்சியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறியில் உள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள 10 மாநகராட்சிகள், 25 மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக, சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை ஆகிய கட்சிகள் கூட்டணி ஏதும் வைத்துக் கொள்ளாமல் தனித்தனியாக களம் கண்டன.
குறிப்பாக, ஆளும் பாஜகவும், சிவசேனையும் தங்களுக்கு இடையேயான கூட்டணியை முறித்துக் கொண்டு இத்தேர்தலில் போட்டியிட்டன. எனவே, இந்தத் தேர்தலானது பாஜக - சிவசேனை இடையே நடைபெறும் பலப்பரீட்சையாகவே கருதப்பட்டது. மேலும், தேர்தல் பிரசாரங்களின்போது இரு கட்சிகளும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்துக் கொண்டன.
பாஜக அமோக வெற்றி: இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கின. இதில், தொடக்கத்தில் சிவசேனை முன்னிலை வகித்து வந்தது. பின்னர், சிறிது நேரத்தில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜகவின் கை ஓங்க தொடங்கியது. தாணே, புணே, பிம்ப்ரி சிஞ்ச்வாட் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பெரும்பான்மை இடங்களை பாஜக கைப்பற்றியது.
அதன்படி, 8 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிருஹன் மும்பையில் மட்டும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனை - பாஜக இடையே இழுபறி நிலவி வருகிறது.
இதனிடையே, 25 மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தலில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதில், சிவசேனைக்கு 3 இடங்களும், காங்கிரஸýக்கு 6 இடங்களும் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களையும், இதர கட்சி ஓரிடத்தையும் கைப்பற்றின.
யார்-யாருக்கு; என்னென்ன இடங்கள்? நாசிக், புணே, பிம்ப்ரி சிஞ்ச்வாட், அமராவதி, உல்லாஸ் நகர், அகோலா, நாகபுரி, சோலாபூர் ஆகிய 8 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. தாணே மாநகராட்சியில் மட்டும் சிவசேனை வெற்றி பெற்றுள்ளது.
நாசிக்கில் மொத்தமுள்ள 122 தொகுதிகளில் 66 இடங்களையும், புணேவில் உள்ள 162 தொகுதிகளில் 100 இடங்களையும் பாஜக கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது. பிம்ப்ரி சிஞ்ச்வாடில் உள்ள 128 தொகுதிகளில் 78 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதேபோல், அமராவதியில் (100) 43 தொகுதிகளிலும், உல்லாஸ் நகரில் (78) 33 தொகுதிகளிலும், அகோலாவில் (73) 48 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாகபுரியில் (145) 91 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றுள்ளது.
சோலாபூர் மாநகராட்சியைப் பொருத்தவரை, அங்குள்ள 102 தொகுதிகளில் 49 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதில், சிவசேனை 21 இடங்களையும், காங்கிரஸ் 11 இடங்களையும் கைப்பற்றின. தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பல்வேறு மாநகராட்சிகளிலும் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் சிவசேனை வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த இடங்களில் முறையே காங்கிரஸýம், தேசியவாத காங்கிரஸýம் உள்ளன.
தாணேவில் மட்டும் சிவசேனை: தாணே மாநகராட்சியில் உள்ள 130 தொகுதிகளில் சிவசேனை 67 இடங்களைக் கைப்பற்றியது. இதில் பாஜக 23 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 34 இடங்களைக் கைப்பற்றியது.
பிருஹன் மும்பையில் இழுபறி: பிருஹன் மும்பை மாநகராட்சியைப் பொருத்தவரை, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பிருஹன் மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 114 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கும். ஆனால், இதில் சிவசேனை 84 இடங்களிலும், பாஜக 82 இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த இரு கட்சிகளுக்குமே ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அந்த மாநகராட்சியில் மட்டும் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கே மேயர் பதவி - உத்தவ்: இந்தச் சூழலில், பிருஹன் மும்பை மாநகராட்சியின் மேயர் பதவி தங்களுக்கே சொந்தம் என்று சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மும்பை மாநகராட்சி மேயராக சிவசேனையைச் சேர்ந்தவரே பதவியேற்பார். இதுவரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும், மேயர் பதவி எங்களுடையது என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்' என்றார்.
குலுக்கல் முறையில் வெற்றி: பிருஹன் மும்பை மாநகராட்சித் தேர்தலில் ஒரு தொகுதியில் சம அளவிலான வாக்குகளைப் பெற்ற இரு வேட்பாளர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிர்ஹாம் தொகுதியில் பாஜக, சிவசேனை சார்பில் முறையே அதுல் ஷாவும், சுரேந்திர பஹால்கரும் போட்டியிட்டனர். இதில் இருவருமே 5,496 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைப்படி, இருவரின் பெயர்களும் துண்டுச் சீட்டுகளில் எழுதப்பட்டு குலுக்கல் நடத்தப்பட்டது. இதில், பாஜகவை சேர்ந்த அதுல் ஷாவின் பெயர் எழுதிய சீட்டு வந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com