ராணுவ ஆட்சேர்ப்புக்கான தேர்வுகள் ரத்து: புனேயில் வினாத்தாள் வெளியானதையடுத்து நடவடிக்கை

இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் எழுத்துத் தேர்வில், சிலருக்கு முன்கூட்டியே கேள்வித் தாள்களை விற்றவர்களை போலீஸார் கைது
ராணுவ ஆட்சேர்ப்புக்கான தேர்வுகள் ரத்து: புனேயில் வினாத்தாள் வெளியானதையடுத்து நடவடிக்கை

மும்பை: இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் எழுத்துத் தேர்வில், சிலருக்கு முன்கூட்டியே கேள்வித் தாள்களை விற்றவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, இந்தியா முழுவதும் ஆள்சேர்ப்புக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் நடைபெற்ற தேர்வுகளில் பங்கேற்க வந்தவர்களில் சிலர், முதல் நாள் இரவே தாங்கள் தங்கியிருந்த அறைகளில் தேர்வுகளை எழுதிகொண்டிருப்பதாக தானே நகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விரைந்து சென்ற போலீஸார் அந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் சுமார் 350 மாணவர்களை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பிடிபட்ட மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பிடிபட்ட மாணவர்கள் மற்றும் கைதானவர்களில் பலர் தானே, நாக்பூர், கோவா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராணுவ பணிக்கு இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்தின் ஏற்பாட்டின்படி, கேள்வித் தாள்களை தயாரித்த ராணுவ உயரதிகாரிகள் முன்கூட்டியே சில தரகர்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர். இந்த கேள்வித் தாள்களை தலா 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு கும்பல் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ராணுவ தேர்வுக்கு பயிற்சி அளித்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள், இடைத் தரகர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராணுவ உயரதிகாரிகள் உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், வினாத் தாள்கள் வெளியானது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் இன்று நடைபெறுவதாக இருந்த ராணுவ ஆள்சேர்ப்புக்கான எழுத்து தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com