ரூபாய் நோட்டு விவகார சாதகங்களை பாஜக பயன்படுத்திக் கொள்ளவில்லை: வெங்கய்ய நாயுடு ஒப்புதல்

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தின் சாதகங்களை பாஜக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு ஒப்புக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அடைந்த வெற்றியையொட்டி, தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர். நாள்:
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அடைந்த வெற்றியையொட்டி, தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர். நாள்:

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தின் சாதகங்களை பாஜக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாதில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் சனிக்கிழமை பேசியதாவது:
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் விவகாரத்தில், பாஜகவினர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அந்த விவகாரத்தை பயன்படுத்தி, மக்களின் ஆதரவை பாஜக தொண்டர்கள் திரட்டவில்லை. இதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், அதே நேரத்தில் நாம் எதிர்பார்க்காத சிலர் நமக்கு ஆதரவு அளித்தனர். தெலங்கானா, ஆந்திரம், பிகார் மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளித்தனர்.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன. அப்போது அந்த முடிவால் ஏதோ நன்மை ஏற்படப் போகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டனர்.
உலகம் முழுவதிலும் இருக்கும் அரசியல் கட்சிகளில், மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் பாஜகதான் மிகப்பெரிய கட்சி. நாடு முழுவதும் பாஜகவில் 11 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி பலம் குறைந்து, கருத்தியலான கட்சியாகிவிட்டது.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இதேபோன்ற வெற்றியை தெலங்கானாவிலும் பாஜக பெற வேண்டும். இதற்கு கட்சித் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஒடிஸூ, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக மாறியுள்ளது. வருங்காலத்தில் இந்த மாநிலங்களில் ஆளும் கட்சியாக பாஜக உருவெடுக்க வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
ப. சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம்: முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தற்போது மோசமாகி விட்டதாகவும், தொடர்ந்து தவறுகள் இழைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துவோர் தேசவிரோதிகளாக கருதப்படுவர் என்ற ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத்தின் கருத்தையும் ப. சிதம்பரம் விமர்சித்திருந்தார்.
ப. சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "காஷ்மீர் நிலவரம் குறித்து அவருக்கு தெரியும். மத்திய உள்துறை அமைச்சராக முன்பு அவர் பதவி வகித்துள்ளார். அப்படியிருக்கையில் இதுபோன்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கக் கூடாது; அது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. அவரின் கருத்தை கண்டிக்கிறேன். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com