நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 2.8 கோடி வழக்குகள் தேக்கம்

நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 2.81 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. அவற்றில் சுமார் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 2.81 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. அவற்றில் சுமார் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
"இந்திய நீதித்துறை வருடாந்திர அறிக்கை-2015-16', "இந்தியாவில் துணை நீதிமன்றங்கள்: 2016' ஆகிய இரு அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 2 கோடியே 81 லட்சத்து, 25 ஆயிரத்து 66 சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. எனினும், அதே காலகட்டத்தில் 1 கோடியே 89 லட்சத்து 4 ஆயிரத்து 222 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
மாவட்ட நீதிமன்றங்களில் மிகப்பெரிய அளவில் வழக்குகள் குவிந்து கிடப்பதற்கான காரணம் நீதிபதிகள் பற்றாக்குறைதான். இது கவலையளிக்கிறது. ஏனெனில், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நீதிபதிகளின் எண்ணிக்கை 21,324-ஆக இருந்தபோதிலும், அவற்றில் 4,954 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நிலுவையில் இருக்கும் மிகப்பெரிய அளவிலான வழக்குகளை விசாரிக்க தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது தெளிவாகிறது. எனவே, நிலைமையைச் சமாளிக்க கூடுதலாக நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை உடனடியாகத் தேவைப்படுகின்றன.
இந்த உடனடித் தேவையே, மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளை அமல்படுத்தவும், அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்தபடி மக்கள்தொகை-நீதிபதி விகிதத்தை 10 லட்சம்பேருக்கு 50 என்று உயர்த்தவும் அரசு கடமைப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையானது ஒவ்வோர் ஆண்டும் தொடரப்படும் புதிய வழக்குகளைக் கையாள்வதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இந்தப் புதிய வழக்குகள், வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
எனவே, மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் சுமார் 15,000 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்த அறிக்கைகளில் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com