உ.பி.: கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முடிவு

உத்தரப் பிரதேசத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் முடிவெடுக்கப்படும்
உ.பி.: கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முடிவு

உத்தரப் பிரதேசத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் முடிவெடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வரும், சமாஜவாதிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சிக்குள் குடும்பப் பிரச்னையால் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. இதையடுத்து, அகிலேஷின் தந்தையான முலாயம் சிங் யாதவின் சகோதரர் ராம்கோபால் யாதவால் மாநிலத் தலைநகர் லக்னௌவில் கடந்த 1-ஆம் தேதி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அகிலேஷ் யாதவ் கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டார்.
உட்கட்சிப் பூசல் ஏற்பட்டதை அடுத்து, முலாயம் சிங் அணி, அகிலேஷ் அணி என கட்சி இரண்டாகப் பிரிந்தது. அதைத் தொடர்ந்து, கட்சியின் "சைக்கிள்' சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இந்நிலையில், "சைக்கிள்' சின்னம் அகிலேஷ் யாதவின் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.
இதன்மூலம், அகிலேஷ் அணியின் வேட்பாளர்கள் எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் "சைக்கிள்' சின்னத்தில் போட்டியிட முடியும்.
தேர்தல் ஆணையத்தின் முடிவு முலாயம் சிங் யாதவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில் லக்னௌவில் உள்ள அகிலேஷின் இல்லத்தில் அவரை செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
அப்போது, அவர் கூறியதாவது:
கட்சியின் "சைக்கிள்' சின்னம் எனது அணிக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே இருப்பதால், வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய பணி உள்ளது. தேர்தலில் எனது தந்தை முலாயம் சிங் எனக்கு ஆதரவாக இருப்பார். இந்தத் தேர்தலில் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது.
எனது தந்தையுடனான உறவில் எந்த விரிசலும் ஏற்படாது என்றார் அவர்.
அப்போது, காங்கிரஸுடன் உங்கள் அணி கூட்டணி வைக்குமா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும்' என்று அகிலேஷ் பதிலளித்தார்.
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனும், ராஷ்ட்ரீய லோக் தளக் கட்சியின் தலைவருமான அஜித் சிங்குடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமாஜவாதி வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்ச நீதிமன்றத்தில் அகிலேஷ் அணி கேவியட் மனு தாக்கல்
தங்கள் தரப்புக்கு "சைக்கிள்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது தங்களைக் கேட்காமல் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனக் கோரி அகிலேஷ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் "கேவியட்' மனுவைத் தாக்கல் செய்தது.
அகிலேஷ் தரப்புக்கு "சைக்கிள்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இதையடுத்து, முலாயம் அணியினர் அதிருப்தி அடைந்தனர். தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முலாயம் அணியினர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு அகிலேஷின் ஆதரவாளர் ராம் கோபால் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் "கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கூட்டணிக்குத் தயார்


சமாஜவாதியுடன் கூட்டணி அமைத்து உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலரும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆஸாத், தில்லியில் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி அடுத்து ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com