மூத்த திருநங்கைகளுக்கு ரயில் கட்டணத்தில் 50% சலுகை

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்குவதைப் போல் இனி மூத்த திருநங்கைகளுக்கும் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்குவதைப் போல் இனி மூத்த திருநங்கைகளுக்கும் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம், பிறந்த இடம் உள்ளிட்ட ரீதியில் யாரையும் பாகுபடுத்தக் கூடாது; அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
ஆனால் ரயில் பயணிகளுக்கான முன்பதிவு மற்றும் பயணச்சீட்டு ரத்து செய்யும் படிவங்களில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை அதில் சேர்க்கவில்லை. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயல்' என்று கூறி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.
அதேபோல், ரயில்களில் படுக்கை வசதியிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனிடையே, மற்றொரு வழக்கில், திருநங்கைகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ரயில் பயணச் சீட்டு கட்டணத்தில் போதிய சலுகைகளை வழங்கி, மூன்றாம் பாலினத்தவராக அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, திருநங்கைகளை அங்கீகரிக்கும் வகையில் தனது கொள்கைகளில் சில மாற்றங்களை இந்திய ரயில்வே இறுதி செய்துள்ளது.
அதன்படி, ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதச் சலுகை வழங்குவதுபோல் 58 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கும் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
மேற்கண்ட விதிமுறை மாற்றத்தின் மூலம் ரயில் பயண முன்பதிவு, பயணச்சீட்டு ரத்து ஆகிய படிவங்களிலும், இணையதளத்திலும் பாலினத்துக்கான பகுதியில் ஆண், பெண் என்பதோடு திருநங்கைகள் என்ற பாலினமும் சேர்க்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com