மக்கள் சொன்னதைக் கேட்டார் பன்னீர்செல்வம்; சொன்னதை செய்கிறார் மோடி

கடந்த ஆட்சிக் காலங்களை விட, மக்கள் சொன்னதைக் கேட்டு, அவர்களது உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாக காரியத்தில் இறங்கினார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
மக்கள் சொன்னதைக் கேட்டார் பன்னீர்செல்வம்; சொன்னதை செய்கிறார் மோடி

புது தில்லி: கடந்த ஆட்சிக் காலங்களை விட, மக்கள் சொன்னதைக் கேட்டு, அவர்களது உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாக காரியத்தில் இறங்கினார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

எந்தவொரு கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக தடியடி மற்றும் வன்முறையையே பதிலாகக் கொடுக்கும் அரசுகளுக்கு மாற்றாக, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாக தில்லி புறப்பட்டுச் சென்றார் பன்னீர்செல்வம்.

மத்திய அரசு நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்று மோடி முதலில் கைவிரித்துவிட்டாலும், மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.

அந்த உறுதியோடு, சட்டநிபுணர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து சாதகமான விஷயங்களையும் பயன்படுத்தி, இன்று அவசரச் சட்டம் இயற்றும் அளவுக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அவசரச் சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவரின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் என்ன கேட்பது, நான் என்ன செய்வது என்ற போக்கை மாற்றி, மக்களின் முதல்வராக ஜெயித்துக் காட்ட உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.

அதே போல, தமிழக அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை, இன்றைய நேரம் வரை கட்டிக் காப்பாற்றியுள்ளார் பிரதமர் மோடி.

ஆதரவோடு நின்றுவிடாமல், தமிழர்களின் போராட்டத்துக்கும் பாராட்டுகளையும் மோடி கூறியுள்ளார்.
தமிழக கலாசாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இவ்வளவுப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தும், சிறு வன்முறை கூட ஏற்படவில்லை. ரயில் மறியலின் போது பாதிக்கப்பட்டும் ரயில் பயணிகளுக்குக் கூட, போராட்டக்காரர்கள் உணவுகள் வழங்கி பாதுகாப்பது போராட்டத்துக்கே ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது.

இது குறித்து பிரதமர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது, தமிழக கலாசாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

தமிழக கலாசார விருப்பங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு  உறுதியாக உள்ளது. புதிய உச்சங்களை தமிழகம் அடைய மாநில அரசுடன் தொடர்ந்து இணைந்து பாடுபடுவோம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com