இடஒதுக்கீடு குறித்து சர்ச்சை கருத்து: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவருக்கு டி.ராஜா கண்டனம்

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு குறித்து சர்ச்சை கருத்து: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவருக்கு டி.ராஜா கண்டனம்

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய அமைதி, ஒற்றுமை அமைப்பின் (ஏஐபிஎஸ்ஓ) மாநாட்டில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது:
தனது ஹிந்துத்துவ கொள்கைகளால், தலித்துகளுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுகிறது. சட்டமேதை அம்பேத்கரால் வலியுறுத்தப்பட்ட ஜாதி ஒழிப்பை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.
நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், சமூக நீதியோ, பொருளாதார நீதியோ இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. மக்களிடையே பன்னெடுங்காலமாக நிலவி வந்த பாகுபாடு, வாய்ப்புகள் மறுப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் இடஒதுக்கீடு அவசியமாகும். தனியார் துறையிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. இது, வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல. தலித்துகள், பழங்குடியினர் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் கடமையையே கேள்விக்கு உள்ளாக்கும் விஷயமாகும் என்றார் டி.ராஜா.
சர்ச்சையும், விளக்கமும்: முன்னதாக, இடஒதுக்கீடு தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா, "ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்றென்றும் நிலைத்திருப்பது நல்லதல்ல; அதற்கு கால வரம்பு இருக்க வேண்டும் என்றுதான் சட்டமேதை அம்பேத்கர் விரும்பினார். மக்களிடையே பிளவை ஊக்குவிக்கும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர், இதுதொடர்பாக விளக்கமளித்த ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபோலே, "பிறப்பு, பாலினம் அல்லது இதர சமூக காரணிகள் அடிப்படையிலான பாகுபாடு முழுமையாக ஒழியும் வரையில் இடஒதுக்கீடு தொடர வேண்டும்; இதனை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கிறது. இதில் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com