உ.பி. தேர்தலில் பாஜக வென்றால் இடஒதுக்கீடு ரத்தாகிவிடும்: மாயாவதி

""உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்'' என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரித்துள்ளார்.
உ.பி. தேர்தலில் பாஜக வென்றால் இடஒதுக்கீடு ரத்தாகிவிடும்: மாயாவதி

""உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்'' என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவர், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால், அது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உடனடியாக தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்.
எனவே, இடஒதுக்கீடு வழங்குவதை பரிசீலிக்க வேண்டும் என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இனிமேல் பேசாத அளவுக்கு, பிகார் பேரவைத் தேர்தலைப் போலவே உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு பாடம் புகட்டியாக வேண்டும்.
இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினருக்கு சட்ட மேதை அம்பேத்கர் வங்கியுள்ள சட்டபூர்வ உரிமையாகும். ஒருபுறம், அம்பேத்கரை ஆதரிக்கும் பாஜகவும், பிரதமர் மோடியும், மறுபுறம் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். இது, பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டையும், ஜாதிய மனநிலையையும் அம்பலப்படுத்துகிறது.
மேலும், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள், சமாஜவாதிக் கட்சிக்கு வாக்களித்தால், அது, மறைமுகமாக பாஜகவுக்கு சாதகமாகிவிடும். எனவே, பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டுமெனில் சிறுபான்மையின மக்கள், பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்க வேண்டும்.
"சமாஜவாதியுடன் கூட்டணி காங்கிரஸூக்கு உதவாது': காங்கிரஸ் கட்சி, தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகக் கருதினால், சமாஜவாதிக் கட்சியுடன் கூட்டணி அமைக்கக் கூடாது. தனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிறிய கட்சிகளுடன் அக்கட்சி கூட்டணி அமைக்க வேண்டும் அல்லது தனித்தே போட்டியிட வேண்டும்.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அகிலேஷ் யாதவை, முதல்வர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம், சமாஜவாதிக் கட்சியிடம் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக பணிந்து விட்டது. இது, காங்கிரஸ் கட்சியின் அரசியல் இயலாமையையே காட்டுகிறது என்றார் மாயாவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com