தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீரில் தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்திய வீரரை, பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை திரும்ப ஒப்படைத்தது.

ஜம்மு-காஷ்மீரில் தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்திய வீரரை, பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை திரும்ப ஒப்படைத்தது.
ஜம்மு-காஷ்மீரின் மெந்தர் செக்டாரில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி பணியில் இருந்த 37-ஆவது ராஷ்டிரிய ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த சந்து பாபுலால் சவாண் (22) என்ற வீரர், கவனக்குறைவாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி சென்றார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது.
உரி தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் இந்திய வீரர் சவாண் சிறைபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை பத்திரமாக மீட்பதற்காக, மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், சந்து பாபுலால் சவாணை பாகிஸ்தான் சனிக்கிழமை திரும்ப ஒப்படைத்தது. அட்டாரி-வாகா எல்லையில், எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் (பிஎஸ்எஃப்) அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், அவரை ராணுவத்திடம் பிஎஸ்எஃப் ஒப்படைத்தது. அவருக்கு ராணுவ மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
தீவிர முயற்சிக்குப் பலன்: இதுதொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரி கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த இந்திய வீரர் சவாணை மீட்பதற்கு, வெளியுறவு அமைச்சகமும், இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். அதன்விளைவாக, அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, அவர் வீடு திரும்புவார் என்றார் சுபாஷ் பாம்ரி.
நன்றியை மறக்கமாட்டேன்: ராணுவ வீரர் சவாண், மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டம், போர்விகிர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற செய்தியை கேட்ட அதிர்ச்சியில், அவரது பாட்டி மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில், சவாண் விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, அவரது சகோதரரும், ராணுவ வீரருமான பூஷண் சவாண் கூறியதாவது:
எனது சகோதரனை மீட்க ராணுவம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை ஒருபோதும் மறக்கமாட்டேன். எனது இறுதி மூச்சு உள்ள வரை ராணுவத்துக்காகப் பணியாற்றுவேன் என்றார்.
நல்லெண்ண நடவடிக்கை: இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் ஆசிஃப், சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய வீரர் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்' என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மனிதாபிமான அடிப்படையிலும், எல்லையில் அமைதியை உறுதி செய்வதற்காகவும் இந்திய வீரரை விடுவிக்கும் முடிவை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com