ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: கடைசி 10 நாள் பணப் பரிமாற்றங்கள் குறித்து தீவிர ஆய்வு

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் கடைசி 10 நாள்களில் நடைபெற்ற பல்வேறு பணப் பரிமாற்றங்கள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: கடைசி 10 நாள் பணப் பரிமாற்றங்கள் குறித்து தீவிர ஆய்வு

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் கடைசி 10 நாள்களில் நடைபெற்ற பல்வேறு பணப் பரிமாற்றங்கள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

கருப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டுகளை தடுப்பது, பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதை தடுப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக்கொண்டு பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் வங்கிகளில் மாற்றித் தரப்பட்டன. கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வந்ததை அடுத்து, பல்வேறு புதிய நடைமுறைகûளையும், கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியது.
பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் புதிய, பழைய ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றின.
ஏற்கெனவே, ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு அப்பணம் எப்படி வந்தது என்று விளக்கம் கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இது தவிர பான் எண் குறிப்பிடாமல் ரூ.50,000 மேல் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட்கள் மீதும் வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும், பலர் பிற நபர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தங்கள் கருப்புப் பணத்தை மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் கடைசி 10 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பணப் பரிமாற்றங்களையும் மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
அக்காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வங்கிக் கணக்குகளில் அதிக பணம் டெபாசிட் செய்தது, வங்கியில் வாங்கிய கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தியது, இறக்குமதிக்கான பணத்தை முன்கூட்டியே செலுத்தியது, இ-வாலட்டுகள் மூலம் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் போன்றவை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சந்தேகப்படும் வகையில் அதிக பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டவர்கள் வருமான வரித் துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை காலகட்டத்தில் வங்கிகளில் வழக்கமாக நடைபெறும் பணப் பரிமாற்றத்தைவிட 4 மடங்கு அதிகமாக பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com