இந்திய படை பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்: சீனாவின் மிரட்டலுக்கு ஜேட்லி பதிலடி

இந்தியாவின் படை பலத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாமென்று சீனாவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய படை பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்: சீனாவின் மிரட்டலுக்கு ஜேட்லி பதிலடி

இந்தியாவின் படை பலத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாமென்று சீனாவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன போரில் இந்தியா தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி வரலாறு கற்றுத் தந்த பாடங்களை மறந்துவிடக் கூடாது என்று இந்தியாவுக்கு சீனா மிரட்டல் விடுத்திருந்தது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு வியாழக்கிழமை பேட்டி அளித்த அருண் ஜேட்லியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்:
இந்தியாவில் 1962-ஆம் ஆண்டில் நிலவிய சூழ்நிலை இப்போது இல்லை. 2017-ஆம் ஆண்டில் இந்தியா முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது. எனவே, இந்தியாவின் படை பலத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
மேலும், இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்திய எல்லைப் பகுதியை ஒட்டிய இடம் பூடானுக்கு சொந்தமானது என்றும், அதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவுடன் பூடான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று பூடான் விளக்கமாக அறிக்கைவிட்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு சொந்தமில்லாத பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடுவது தெளிவாகத் தெரிகிறது.
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் டோங்லாங் பகுதி அமைந்துள்ளது. இதில் பெரும் பகுதி இந்தியக் கட்டுப்பாட்டிலும், சிறிய பகுதி பூடான் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அங்கு அத்துமீறி நுழைந்து சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், டோங்லாங் பகுதிக்குள் கடந்த சில நாள்களுக்கு முன்பு அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய ராணுவம் அமைத்திருந்த பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். எனினும், அவர்களை முன்னேறவிடாமல் இந்திய ராணுவம் தடுத்து விட்டது. மேலும், இந்திய ராணுவம் அப்பகுதியில் படைகளைக் குவித்துவிட்டது.
இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு இந்தியா மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய சீன வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர், சீனப் பகுதிக்குள் இந்தியா அத்துமீறி நுழைந்ததுள்ளது. டோங்லாங் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த முடியும். 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப் போரை மறந்துவிட வேண்டாம் என்று மிரட்டல் தொனியில் கூறியிருந்தார்.
உயர் நிலை ஆய்வுக் கூட்டம்: சிக்கிம் மாநில எல்லையில் நிலவி வரும் பதற்றான சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி விபின் ராவத் தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் டோங்லாங் பகுதியில் இப்போதுள்ள சூழ்நிலை குறித்தும், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, வியாழக்கிழமை சிக்கிமில் உள்ள ராணுவ மையத்துக்குச் சென்ற விபின் ராவத், அங்கு ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com