பந்தாடிய அரசு:  பயப்படாத பெண் போலீஸ் அதிகாரி; முகநூலில் 'ஹேப்பி ஸ்டேட்டஸ்'!

பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்த பெண் போலீஸ் அதிகாரி, புகாரினால் இடமாற்றம் செய்யப்பட்ட பொழுதும், மனம் கலங்காமல் முகநூலில் அதனை வரவேற்று 'ஸ்டேட்டஸ்'... 
பந்தாடிய அரசு:  பயப்படாத பெண் போலீஸ் அதிகாரி; முகநூலில் 'ஹேப்பி ஸ்டேட்டஸ்'!

லக்னோ:  பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்த பெண் போலீஸ் அதிகாரி, புகாரினால் இடமாற்றம் செய்யப்பட்ட பொழுதும், மனம் கலங்காமல் முகநூலில் அதனை வரவேற்று 'ஸ்டேட்டஸ்' போட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் தற்பொழுது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷார் மாவட்டம் சயன்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷ்ரேஸ்தா தாக்குர். காவல்துறை அதிகாரியான இவர் கடந்த 23-ஆம் தேதி அன்று (வெள்ளி) உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஒட்டியதாக பாரதிய ஜனதா கட்சி தொண்டர் ஒருவருக்கு அபராதம் விதித்து கைது செய்தார். 

உடனே கைது செய்யப்பட்ட பாஜக தொண்டருக்கு ஆதரவாக, புலந்த்ஷார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரின் கணவரான பிரமோத் லோதியின் தலைமையில், பாஜக தொண்டர்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அத்துடன் அவர்கள் ஷ்ரேஸ்தா தாக்குருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 

கைது செய்யப்பட்டவரை விடுவிக்க வேண்டுமென்று கூறி சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பியவர்களை கண்டு அஞ்சாமல், 'நீங்கள் உடனடியாக கலைந்து செல்லா விட்டால், உங்கள் மேல் கூடுதலான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும்' என்று ஸ்ரேஷ்தா  தெரிவித்தார்.

அத்துடன் தங்கள் மீது எப்படி வழக்கு பதிவு செய்யலாம்  என்று அவர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, 'அப்படியானால் உங்கள்மீது எல்லாம் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று முதல்வர் கையெழுத்திட்ட கடிதம் கொண்டு வாருங்கள்' என்றும் அவர் தைரியமாக கூறினார்.

அத்துடன் பாஜக  தொண்டர்களை மட்டும் போலீஸ் குறி வைப்பதாக அவர்கள் கூறிய பொழுது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், தான் யாருக்கும் அஞ்சாமல் தன்னுடைய கடமையை செய்வதாகவும்' அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் பொழுது பதிவு செய்யப்பட்ட விடியோ அப்பொழுது சமுக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது.

விடியோ: 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஷ்ரேஸ்தா தாக்குர் நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பெஹ்ரைச் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. புலந்த்ஷார் மாவட்டத்திலிருந்து ஷ்ரேஸ்தா உட ன் சேர்த்து நான்கு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள பொழுதும், உள்ளூர் பாஜக தொண்டர்களை அவமரியாதை செய்யும் விதத்தில் நடந்து கொண்ட காரணத்தினால், தங்களது புகார் காரணமாகத்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று உள்ளூர் பாஜக தலைவர்கள் பெருமிதமாக சொல்லி வருகின்றனர் 

இது தெடர்பாக புலந்த்ஷார் மாவட்ட பாஜக தலைவர் முகேஷ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, ‘அந்த மாவட்டத்தினைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அருகாமை பகுதி எம்.பி ஒருவர் ஆகியோர் கடந்த வாரம் முதல்வர் ஆதித்யநாத்தைச் சந்தித்து, தாக்கூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியதாக தெரிவித்தார். அதே நேரம் இது மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒட்டுமொத்த இடமாற்றம் என்று மாவட்ட காவல்துறை  உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால இது எதனைப் பற்றியும் கவலைப்படாத ஷ்ரேஸ்தா இந்த இடமாற்றம் காரணமாக தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'பெஹ்ரைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளேன். அது நேபாள் எல்லைக்கு அருகில் உள்ளது. கவலைப்பட வேண்டாம் நண்பர்களே!நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய நல்ல வேலைக்கு கிடைத்த பரிசாக இதனை ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் பெஹ்ரைச்சுக்கு வரவேற்கிறேன்'.என்று தெரிவித்துள்ளார்.  

தற்பொழுது அவரது மாறுதல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆதரவு வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com