அகிலேஷின் 'சைக்கிள் பாதை' திட்டத்துக்கு முடிவுகட்ட உ.பி. அரசு திட்டம்

சமாஜவாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கொண்டுவந்த 'சைக்கிள் பாதை' திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தற்போதைய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

சமாஜவாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கொண்டுவந்த 'சைக்கிள் பாதை' திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தற்போதைய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
நெதர்லாந்து பாணியில் உத்தரப் பிரதேசத்தில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அதற்கென தனியாக சாலை அமைக்க முந்தைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு 'சைக்கிள் பாதை' திட்டத்தைக் கொண்டுவந்தது.
அதன்படி, தலைநகர் லக்னௌ, நொய்டா, பரேலி ஆகிய நகரங்களில் சாலையோரம் சைக்கிள் பயன்பாட்டுக்காக தனியாக பலகோடி ரூபாய் செலவில் பல கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன.
இந்தத் திட்டம், சைக்கிள் பயன்பாட்டாளர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
பிரதான சாலையிலிருந்து சைக்கிள் பாதை தனித்து தெரிவதற்காக சாலையோரம் சிவப்பு, பச்சை வண்ணம் தீட்டப்பட்ட தடுப்புகள் வைக்கப்பட்டன. (சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்கள் சமாஜவாதி கட்சி கொடியில் இடம்பெற்றிருக்கிறது).
இதை குறிப்பிட்டு, சமாஜவாதி கட்சி, சுயவிளம்பரம் தேடிக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் அப்போது கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், சைக்கிள்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சாலைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா தெரிவித்தார்.
இதுகுறித்து லக்னௌவில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறுகையில், 'சைக்கிள்கள் செல்வதற்காக தனியாக அமைக்கப்பட்ட சாலையால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாக பரேலி நகரவாசிகள் புகார் தெரிவித்தனர். அதன்படி, பரேலி நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை அழிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
இதேபோல், லக்னௌவிலும் சைக்கிள் பாதைகள் அழிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'பொதுப் பணித்
துறைக்குச் சொந்தமான சாலையில் சைக்கிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பாதையை அழிக்கும் முடிவை அந்தத் துறைதான் முடிவு செய்ய வேண்டும்' என்று சுரேஷ் குமார் கன்னா பதிலளித்தார்.
முன்னதாக, ஆம்புலன்ஸ், ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு சூட்டப்பட்டிருந்த 'சமாஜவாதி' பெயர், உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com