காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு நெருக்கடி அளிக்கிறது மத்திய அரசு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருகிறது என புதுவை முதல்வர் வி. நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு நெருக்கடி அளிக்கிறது மத்திய அரசு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருகிறது என புதுவை முதல்வர் வி. நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
தில்லியில் உள்ள புதுச்சேரி இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்:
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மத்தியில் உள்ள பாஜக கூட்டணிஅரசு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருகிறது. அதற்கு மாநிலங்களின் ஆளுநர்களையும், துணைநிலை ஆளுநர்களையும் மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.
யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரையில், மாநிலத்தின் நிர்வாகி (துணைநிலை ஆளுநர் கிரண் பேடி), புதுச்சேரி மாநில விதிகளுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். மாநில நிர்வாகிக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை.
இந்நிலையில், புதுச்சேரி அரசின் பரிந்துரையில்லாமல் சட்டபேரவை நியமன உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பது செல்லாது. சட்டப்படியும், வழக்கப்படிம் நியமன உறுப்பினர்களை நியமிக்க முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் முடிவு செய்து கோப்புகளை ஆளுநர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.
மூன்று நியமன உறுப்பினர்களை 2016, ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினேன். அதில் நியமன உறுப்பினர்களின் நியமனம் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். ஆனால், கடிதம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனிடையே நியமன உறுப்பினர்களின் நியமனம் தொடர்பான முயற்சிகள் நடைபெறுவதாக தெரிந்தவுடன் கடந்த வாரம் தில்லிக்கு வந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தேன்.
இந்நிலையில், எனது பார்லிமென்ட்ரி செயலாளர் லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார். நியமன உறுப்பினர்களாக யாரையும் நியமிக்கவில்லை என நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
கடந்த 1-ஆம் தேதி மத்திய அரசு புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதில் வெறும் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தன. முகவரி குறிப்பிடவில்லை. அந்த மூவருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, நியமன உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க பேரவைத் தலைவருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது மட்டுமே துணைநிலை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடுவோம். மேலும், குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com