குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உத்தரவு பிறப்பிக்கக் கூடாது: கட்சிகளுக்கு ஆணையம் எச்சரிக்கை

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் எந்த வகையில் (யாருக்கு) வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவுகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் தண்டனை நடவடிக்கைக்கு

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் எந்த வகையில் (யாருக்கு) வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவுகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் தண்டனை நடவடிக்கைக்கு ஆளாகும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதேவேளையில் இத்தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து மக்கள் பிரதிநிதிகளிடம் ஆதரவு திரட்டவும், இத்தேர்தலில் வாக்குப்பதிவில் பங்கேற்காமல் இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளவும் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17- ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களும், அனைத்து மாநில சட்டப் பேரவைகளின் எம்எல்ஏக்களும் தகுதி பெற்றுள்ளனர். எனவே விதிமுறைப்படி இத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கொறடா உத்தரவைப் பிறப்பிக்க முடியாது. மேலும் ரகசிய வாக்குப்பதிவு என்பதால் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்க முடியும்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற கட்சியின் முடிவுக்கு மாறாக வாக்களித்தால் தங்களின் எம்.பி. அல்லது எம்எல்ஏ பதவி தகுதிநீக்கத்துக்கு ஆளாகுமா? என்று சில மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்து தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் 'இத்தேர்தலில் எந்த வகையில் (யாருக்கு) வாக்களிக்க வேண்டும் என்று ஒரு கட்சி கொறடா உத்தரவு பிறப்பிப்பதோ, வேறு வகையில் உத்தரவிடுவதோ இந்திய தண்டனைச் சட்டத்தின் 171சி பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றாகும். அவ்வாறு செய்யும் கட்சி மீது இப்பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள எம்.பி., எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும். ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மாநில மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும். இத்தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற வேண்டும். மொத்த வாக்குகளில் பாதியளவு என்பது 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com