மேற்கு வங்கத்தின் பதுரியாவுக்கு செல்ல முயன்ற பாஜக, இடதுசாரி, காங்கிரஸ் பிரமுகர்கள் கைது

மேற்கு வங்கத்தில் வன்முறை பாதித்த பகுதிக்கு தனித்தனி குழுவாகச் செல்ல முயன்ற பாஜக, இடதுசாரி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உள்ளூர் தலைவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது

மேற்கு வங்கத்தில் வன்முறை பாதித்த பகுதிக்கு தனித்தனி குழுவாகச் செல்ல முயன்ற பாஜக, இடதுசாரி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உள்ளூர் தலைவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பதுரியா பகுதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர் முகநூலில் (ஃபேஸ்புக்) பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரு பிரிவினரிடையே திங்கள்கிழமை இரவு மோதல் வெடித்தது. இதில் பல வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியது.
பதுரியா பகுதியில் ஏற்பட்ட மோதல் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் பரவியது. இதனால், துணை ராணுவப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாநில போலீஸாருடன் இணைந்து அவர்கள் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்தனர். கடந்த இரு தினங்களாக அங்கு வன்முறை ஓய்ந்துள்ளது. எனினும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக எம்.பி. ரூபா கங்குலி தலைமையில் அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் 19 பேர் பதுரியா பகுதிக்குச் செல்ல வெள்ளிக்கிழமை முயற்சி மேற்கொண்டனர். ஆனால், போலீஸார் வழியிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து தடுப்புப் காவலில் வைத்தனர்.
முன்னதாக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்களும் பதுரியாவுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் வைத்தனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பதுரியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக வன்முறை நிகழவில்லை என்றாலும், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. எனவே, அரசியல் தலைவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றனர்.
வன்முறை பாதித்த பகுதிக்கு அரசியல் தலைவர்கள் செல்ல வேண்டாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தார்.
வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் வகையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து 3- ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ரோத்துப் பணி மேற்கொண்டனர்.
இந்த வன்முறை குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், 'மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை துரதிருஷ்டவசமானது. வன்முறை பாதித்த பகுதியில் இருப்பவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் பெரும்பான்மையினராக இருந்தாலும் அவர்களைக் காக்க மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com