காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றமே விசாரிக்கும்

'காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கை நாங்களே விசாரிப்போம்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றமே விசாரிக்கும்

'காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கை நாங்களே விசாரிப்போம்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்வதை விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
'காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை' என்று மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிக்க அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9- இல் உத்தரவிட்டது. இது தொடர்பான மனுக்கள் மீது ஜூலை 11- ஆம் தேதிமுதல் தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதி விசாரணை நடைபெற்றது.
அப்போது, கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் ஆஜராகி முன்வைத்த வாதம்: காவிரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு கர்நாடகம் தொடக்க முதலே ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. 1924- ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டதை விட காவிரி நீரைக் கொண்டு கூடுதலான பாசனப் பகுதிகளில் தமிழகம் விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 1924- ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை தமிழகம் மீறியுள்ளது. இவ்வாறு ஒப்பந்தத்தை மீறிய தமிழகமே, அதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரியும், காலாவதியாகிப் போன ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரியும் காவிரி நடுவர் மன்றத்தில் முறையிட்டது. இது தொடர்பாக கர்நாடகம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு காவிரி நடுவர் மன்றம் செவிசாய்க்கவில்லை. மேலும், அடிப்படை உண்மைகள் குறித்தும் விவாதிக்கப்படவில்லை' என்று வாதிட்டார்.
இதற்கு தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைகள் சேகர் நாப்தே, ராகேஷ் திரிவேதி, உமாபதி உள்ளிட்டோர் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும், 'காவிரி ஒப்பந்தம் காலாவதியானது, காவிரி ஒப்பந்தத்தை மீறியது ஆகியன தொடர்பாக கர்நாடகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நடுவர் மன்றத்தில் தமிழகம் ஏற்கெனவே உரிய பதிலை அளித்துள்ளது' என்றனர்.
அப்போது நீதிபதிகள், 'கர்நாடக அரசின் வாதங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. இதற்குப் பதில் அளிக்க தமிழகத்துக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகம், தமிழகம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தெளிவான நிலையில் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் நாட்டின் ஒரு பகுதியே ஆகும். மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்கும். இறுதி விசாரணை வியாழக்கிழமையும் நடைபெறும்' என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com