காஷ்மீர்: எதிர்க்கட்சிகளிடம் ராஜ்நாத், சுஷ்மா இன்று விளக்கம்

காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் மற்றும் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை விளக்கிக் கூற உள்ளனர்.
காஷ்மீர்: எதிர்க்கட்சிகளிடம் ராஜ்நாத், சுஷ்மா இன்று விளக்கம்

காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் மற்றும் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை விளக்கிக் கூற உள்ளனர்.

இதில் பங்கேற்க முக்கிய கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கான இந்த விளக்கக் கூட்டம் நடைபெறுவது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சீனா மற்றும் காஷ்மீர் விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.
எனவே, அத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கான வியூகமாகவே மத்திய அமைச்சர்கள் இருவரும் நடத்தும் இக்கூட்டத்தை பார்க்கத் தோன்றுகிறது.
காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் சிலர் கடந்த திங்கள்கிழமை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 19 பேர் காயமடைந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. இதனிடையே, பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி பல்வேறு அசம்பாவிதச் சம்பவங்களை காஷ்மீரில் அரங்கேற்ற சமூக விரோதிகள் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. எனவே, அந்த மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இதற்கு நடுவே சீனாவுடனான எல்லைப் பிரச்னையும் தீவிரமடைந்துள்ளது. இந்தியா - சீனா - பூடான் ஆகிய நாடுகளின் எல்லையாகக் கருதப்படும் டோகா லா பகுதியில் சாலை அமைக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவதும், சிக்கிம் எல்லைக்குள் அந்நாட்டுப் படையினர் அத்துமீறி நுழைந்ததும் மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால், இரு தரப்புக்கும் இடையே போர்ச் சூழல் மூண்டுள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளிடம் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அந்த விவகாரங்கள் தொடர்பாகவும், அதற்கு தீர்வு காண அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com