குடியரசுத் தலைவர் தேர்தல்: சமூகத்தின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை, தலித் சமூகத்தினருக்கு இடையேயான போட்டியாகக் கூறுவது, நமது சமூகம் இன்னமும் ஜாதிய ரீதியில் சிந்திக்கிறது என்பதை அம்பலப்படுத்தி விட்டது என்று எதிர்க்கட்சிகளின் பொது
குடியரசுத் தலைவர் தேர்தல்: சமூகத்தின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை, தலித் சமூகத்தினருக்கு இடையேயான போட்டியாகக் கூறுவது, நமது சமூகம் இன்னமும் ஜாதிய ரீதியில் சிந்திக்கிறது என்பதை அம்பலப்படுத்தி விட்டது என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமார் கூறினார். வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை புதன்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முதல் முறையாக, கொள்கை அடிப்படையிலான போட்டியாக, குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், இந்தத் தேர்தலை இரு தலித் சமூகத்தினருக்கு இடையேயான தேர்தலாக வர்ணிப்பது மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
இதனால், சமூகம் இன்னமும் ஜாதிய ரீதியில்தான் சிந்திக்கிறது என்பது அம்பலமாகிவிட்டது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
அதேசமயம், இதுபோன்ற விஷயங்கள் இன்னமும் விவாதிக்கப்படுவது கண்டு வருத்தமடைகிறேன். நாம் ஜாதியக் கட்டமைப்புக்குள்ளேயே சிக்கிக் கொண்டிருந்தால், ஒருபோதும் முன்னேற முடியாது.
இதற்கு முன்பு பலமுறை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்தல்களில், உயர்ஜாதி என்று சொல்லப்படும் வகுப்பினர் போட்டியிட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம், அவர்களின் திறமைகள், தகுதிகள், சாதனைகள் ஆகியவை விவாதப்பொருளாக இருந்தன. அவர்களின் ஜாதி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆனால், இந்த முறை மட்டும், ஜாதி என்பதைத் தாண்டி வேறு எதுவும் விவாதிக்கப்படவில்லை. 21-ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறுகலான, பிற்போக்கான சிந்தனைகளுடன் நாம் இருந்தால், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியாது.
தலித் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. அவர்களின் சார்பில் குரல் கொடுக்கவே, தேர்தலில் போட்டியிடுகிறேன். நாட்டில் நம் மதத்தை பின்பற்றுவது மட்டுமன்றி, பிறரின் மதங்களையும் மதிக்கவும் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பண்புகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் மீரா குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com