ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது.
ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது.

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் வாக்குகளைச் சேர்த்து அவருக்கு 5,37,683 வாக்குகள் கிடைக்கும். எனினும், வெற்றியை உறுதி செய்ய அவருக்கு கூடுதலாக 12,000 வாக்குகள் தேவை. தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுகவின் இரு அணிகள் ஆகியவை ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதுதவிர சமாஜவாதி கட்சியில் முலாயம் சிங் ஆதரவு எம்.பி., எம்எல்ஏக்களும் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கு, இடதுசாரிக் கட்சிகள், திமுக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், அவர் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற முடியாது என்றே கருதப்படுகிறது. எனினும், கடைசி நேரம் வரை பிராந்தியக் கட்சிகளின்ஆதரவைத் திரட்டும் பணியில் காங்கிரஸ் மும்முரமாக ஈடுபட்டிருந்தது.
இத்தேர்தலில் 776 எம்.பி.க்கள் (543 மக்களவை எம்.பி.க்கள், 233 மாநிலங்களவை எம்.பி.க்கள்) , 4120 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குப் பதிவு மையம், மாநில சட்டப் பேரவைகளில் ஒரு வாக்குப்பதிவு மையம் என மொத்தம் 32 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 33 கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு அவர்கள் சார்ந்த மாநில மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும்.
வாக்குப் பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளும் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டு ஜூலை 20}ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

55 எம்.பி.க்கள் பேரவையில் வாக்களிக்க அனுமதி

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட 55 எம்.பி.க்கள், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கை தங்கள் மாநில சட்டப் பேரவையில் செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் 41 பேர் மக்களவை உறுப்பினர்கள், 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவர்.
யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வராகிவிட்டபோதிலும், கோரக்பூர் எம்.பி. பதவியை இதுவரை ராஜிநாமா செய்யவில்லை. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மாநிலங்களவை எம்.பி.யாக தொடர்கிறார். இவர்கள் தவிர உத்தரப் பிரதேச துணை முதல்வரும், மக்களவை எம்.பி.யுமான கேசவ் பிரசாத் மெளரியாவும் சட்டப் பேரவையில் வாக்களிக்க அனுமதி பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com