அரசு ஊழியர்கள் ஓய்வு தொடர்பான கொள்கை மறு ஆய்வு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்

பஞ்சாபில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவது தொடர்பாக பின்பற்றப்படும் கொள்கையை அரசு மறுஆய்வு செய்து வருவதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

பஞ்சாபில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவது தொடர்பாக பின்பற்றப்படும் கொள்கையை அரசு மறுஆய்வு செய்து வருவதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
சண்டீகரில் உள்ள பஞ்சாப் சட்டப் பேரவையில் நடத்தப்பட்ட குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் கலந்து கொண்டு அமரீந்தர் சிங் தனது வாக்கை திங்கள்கிழமை பதிவு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பஞ்சாபில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60ஆக முன்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாபைப் சேர்ந்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 58ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவது தொடர்பாக தற்போது பின்பற்றப்படும் கொள்கையை அரசு மறுஆய்வு செய்து வருகிறது.
இது வெறும் ஆய்வில் மட்டுமே உள்ளது. அதன்மீது இறுதி முடிவெடுக்கப்படவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டால், எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை விரிவாக ஆராய்ந்த பிறகே, அதன்மீது இறுதி முடிவெடுக்கப்படும்.
சட்லெஜ்-யமுனை கால்வாய் இணைப்பு விவகாரத்துக்கு இணக்கமான தீர்வை விரைந்து காண்பது தொடர்பாக மத்திய அரசுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருடன் நான் பேசவில்லை.
லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் மீதான தடை வாபஸ் இல்லை: பஞ்சாபில் தொழில்துறை நலன், உணவு தானிய போக்குவரத்து உள்ளிட்டவற்றை பாதுகாப்பது, மாநில பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களை கருத்தில் கொண்டே, லாரி உரிமையாளர்கள் சங்கங்களுக்கு தடை விதிக்கும் முடிவை மாநில அரசு எடுத்தது. இதனால், அந்த முடிவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அமரீந்தர் சிங்.
அப்போது, குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த பாஜகவைச் சேர்ந்த வினோத் கன்னாவின் மறைவையடுத்து, அந்தத் தொகுதிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜகார் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று வெளியான செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அமரீந்தர் சிங் பதிலளிக்கையில், 'அவரது பெயர் இதுவரையிலும் பரிசீலிக்கப்படவில்லை' என்றார்.
பஞ்சாபில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டபிறகும், அதைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமரீந்தர் சிங் பதிலளிக்கையில், 'வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையை மாநில அரசு ஏற்கெனவே தொடங்கி விட்டது; மாநில நிதியமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல், விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இன்னும் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com