குடியரசுத் தலைவர் தேர்தலில் 99% வாக்குப்பதிவு: நாளை மறுதினம் முடிவு வெளியாகிறது

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்பட பல மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், ஆந்திரம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் அந்த இலக்கு எட்டப்படவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தேர்தலைப் புறக்கணித்ததால் 100 சதவீத வாக்குப் பதிவு சாத்தியமாகவில்லை.
உத்தரப் பிரதேச முதல்வரும், எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட சிலர், தங்களது சொந்த ஊர்களில் வாக்குச் செலுத்த சிறப்பு அனுமதி பெற்றிருந்தனர். அவர்களைத் தவிர ஏனைய எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் அவர்களுக்கு உரிய இடங்களில் வாக்குச் செலுத்தினர். பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் வியாழக்கிழமை (ஜூலை 20) எண்ணப்பட உள்ளன.
32 வாக்குச் சாவடிகள்: பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் என மொத்தம் 4,896 பேருக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. எம்எல்ஏக்களைப் பொருத்தவரை 4,120 பேருக்கும், நாடாளுமன்ற எம்.பி.க்கள் 776 பேருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
மொத்தம் 717 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதாக இருந்தது. மீதமுள்ள உறுப்பினர்களைப் பொருத்தவரை அவர்கள் விரும்பிய இடத்தில் வாக்குச் செலுத்த முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முதல் வாக்காளரானார் பிரதமர்: இந்நிலையில், திங்கள்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் மோடி வாக்கு செலுத்தினார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், ஆளும் பாஜக எம்.பி.க்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அன்புமணி ராமதாஸ், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த தபஸ் பால், பிஜூ ஜனதா தள உறுப்பினர் ராம்சந்திர ஹன்ஸ்தக் ஆகிய மூவரும் வாக்களிக்கவில்லை. அவர்களைத் தவிர்த்து 714 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வாக்குச் செலுத்தினர்.
மாநிலங்களில் வாக்குப்பதிவு: எம்எல்ஏக்களைப் பொருத்தவரை அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். அஸ்ஸாம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், நாகாலாந்து, உத்தரகண்ட், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற மாநிலங்களில் ஓரிரு எம்எல்ஏக்களைத் தவிர அனைவரும் வாக்குகளைப் பதிவு செய்ததாகத் தெரிகிறது. இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை மறுதினம் எண்ணிக்கை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் வியாழக்கிழமை (ஜூலை 20) எண்ணப்படுகின்றன. இதற்காக அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகள் தில்லி கொண்டுவரப்பட உள்ளன. அன்றைய தினம் காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 4 மேஜைகளில் 8 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com