திபெத்தில் சீன ராணுவம் போர்ப் பயிற்சி

திபெத்தில் சீன ராணுவம் போர்ப் பயிற்சி மேற்கொண்டது. இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கை பரபரப்பை

திபெத்தில் சீன ராணுவம் போர்ப் பயிற்சி மேற்கொண்டது. இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போர் பயிற்சி குறித்து சீன அரசுத் தொலைக்காட்சி விடியோக்களையும், செய்தியையும் வெளியிட்டுள்ளது. அதன்படி சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தின் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுமார் 11 மணி நேரம் இந்தப் பயிற்சி நடைபெற்றது என்று கூறப்பட்டுள்ளது. எனினும், பயிற்சி எப்போது தொடங்கி எப்போது முடிவடைந்தது என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
போர் நடைபெறும் காலக்கட்டத்தில் அதிக அளவிலான ராணுவ வீரர்களை ஒரு குறிப்பிட்ட பகுதியில் உடனடியாக கொண்டு சேர்ப்பது, ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் இணைந்து தாக்குதல் நடத்துவது, பீரங்கிகளுக்கு எதிரான வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது, பதுங்கு குழிகளை ஏவுகணைகளைக் கொண்டு அழிப்பது, எதிரி இலக்குகளை பீரங்கிகளால் சுட்டு வீழ்த்துவது போன்ற பயிற்சிகளை சீன வீரர்கள் மேற்கொண்டது விடியோ மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், சீன ராணுவத்தினரின் ரேடார் கண்காணிப்பு பிரிவினர் எதிரிகளின் விமானங்களையும், வீரர்களையும் கண்டறிந்து தரைப்படைக்கு தகவல் கொடுக்கின்றனர். அவர்கள் விமான எதிர்ப்பு பீரங்கி மூலம் அந்த இலக்குகளை அழிப்பது போன்ற விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலம் டோகாலாம் பகுதியை மையமாகவைத்து இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவை மிரட்டும் வகையில் சீன ராணுவம் இந்த போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
முன்னதாக, கடந்த வாரம் இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் கடற்படைகள் இணைந்து சென்னையையொட்டிய கடல் பகுதியில் கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கின. இது தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்த முயலும் சீனாவை எச்சரிக்கும் விதத்தில் நடத்தப்பட்ட பயிற்சி என்று கூறப்பட்டது. இதையடுத்து, இந்தியாவை மிரட்டும் வகையில் சீனா போர்ப் பயிற்சி நடத்தியுள்ளது.
இந்தப் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் பிரம்மபுத்திரா (சீனாவில் யார்லுங் சாங்போ) நதிக்கரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இந்திய-சீன சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்கள் ஆவர்.
மேலும், பயிற்சியில் சீனா அண்மையில் நவீன தொழில்நுட்பத்தில் குறைந்த எடையில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவையும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளில் எடுத்துச் செல்வதற்கு வசதியாக குறைந்த எடையில் நவீன ஆயுதங்களை சீனா தயாரித்துள்ளது.
டோகாலாம் பகுதியில் சாலை அமைக்கும் சீனத் தரப்பின் முயற்சியை இந்தியா அண்மையில் முறியடித்தது. ஆனால், அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வரும் சீனா, இந்தியா தனது ராணுவத்தை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com