பதவி விலகல் அல்லது பதவி நீக்கத்தை தவிர தேஜஸ்வி பிரசாத்துக்கு வேறு வழியில்லை: பாஜக

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் பிகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு
பதவி விலகல் அல்லது பதவி நீக்கத்தை தவிர தேஜஸ்வி பிரசாத்துக்கு வேறு வழியில்லை: பாஜக

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் பிகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாதின் மகனுமான தேஜஸ்வி பிரசாத் யாதவுக்கு, பதவி விலகல் அல்லது பதவி நீக்கம் ஆகிய 2 வாய்ப்புகளே இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிகார் மாநிலம், பாட்னாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேஜஸ்வி பிரசாத் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அல்லது அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இதுதவிர, தேஜஸ்வி பிரசாத்துக்கு வேறு வழியில்லை.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தேஜஸ்வியிடம் ராஜிநாமா கடிதத்தை கேட்டுப் பெற வேண்டும். இந்த விவகாரத்தில், நிதீஷ் குமார் எடுக்கும் முடிவுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்றார் அவர்.
அப்போது அவரிடம், நிதீஷ் குமார் விவகாரத்தில் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சுஷில் குமார் மோடி பதிலளிக்கையில், 'குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த்துக்கு நிதீஷ் குமார் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலில், ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவாக பிகாரைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கட்சி மக்கள் பிரதிநிதிகள், ஐக்கிய ஜனதா தள கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்தனர்' என்றார்.
இதனிடையே, பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஷியாம் பகதூர் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியுடனான ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி இன்றே முறிந்தால் நல்லது; ஏனெனில், பாஜகவுடன் இணைந்து செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஷகீல் அகமது கான், சட்டமேலவை உறுப்பினர் திலீப் சௌதுரி ஆகியோர், இந்த விவகாரம் குறித்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றனர்.
ஊடகங்கள் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
பிகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி பிரசாத் யாதவ், தன்னை பதவி விலகும்படி யாரும் வலியுறுத்தவில்லை என்றும், ஊடகங்களே அத்தகைய கருத்துகளை வெளியிடுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பிகார் சட்டப் பேரவையில் நடத்தப்பட்ட குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கலந்து கொண்டு, தேஜஸ்வி பிரசாத் திங்கள்கிழமை தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது மேற்கண்ட குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், 'குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மீராகுமாருக்கு ஆதரவாக ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com