விஜயவாடாவில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்: 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், 2 கோடி ரூபாய்க்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 7 பேர் கைது
விஜயவாடாவில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்: 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், 2 கோடி ரூபாய்க்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்தைக் கொடுத்தனுப்பிய சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ராமவாரபடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு கட்டுக்கட்டாக 2 கோடி ரூபாய்க்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற நகைக்கடைக்காரர் கமிஷனுக்கு பணத்தை மாற்ற தங்களிடம் தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயச்சந்திரனிடம் 5 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் மாற்ற முடியாமல் தேங்கி விட்டதால் அதை மாற்ற அவர் சிலரிடம் 3 கோடி ரூபாய் கொடுத்த போது அவர்கள் கள்ள நோட்டுகளைக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர் என்றும், அதன் பிறகு ரமேஷ் ஜெயின் என்பவரிடம் 2 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து அவர் 25 சதவீத கமிஷன் பேசி ஆட்களை நியமித்ததாகவும் விஜயவாடா காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

பணத்தை மாற்ற இந்த கும்பல் பல முயற்சிகள் செய்தும் மாற்ற முடியாமல் சென்னைக்கே கொண்டு செல்ல திட்டமிட்ட போது போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவருமே சாதாரண நடுத்தர மக்கள் என்றும், பணத்தாசையால் சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மற்றும் ரமேஷ் ஜெயின் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com