ஐதராபாத்தை உலுக்கும் போதை விவகாரம்: பிரபல தெலுங்கு இயக்குநரிடம் 7 மணிநேரம் விசாரணை

ஐதராபாத்தை உலுக்கும் போதை விவகாரம்: பிரபல தெலுங்கு இயக்குநரிடம் 7 மணிநேரம் விசாரணை

ஐதராபாத் காவல்துறை நடத்திய திடீர் சோதனையில் போதை பொருட்கள் வைத்திருந்த வழக்கில் 2 நைஜீரியர்கள், 2 ஆப்பிரிக்கர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2 தினங்களாக ஐதராபாத்தில் போதை தொடர்பான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐதராபாத் காவல்துறை சார்பில் சிறப்பு புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு அமைப்பு புதன்கிழமையும் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது, போதை பொருட்கள் விற்க முயன்றதில் 2 நைஜீரியர்கள் மற்றும் 2 ஆப்பிரிக்கர்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர். 

இவர்கள் அனைவரும் ஐதராபாத் நகரின் மையப்பகுதியான பன்ஜாரா ஹில்ஸ் மற்றும் மசப் டாங்க் ஆகிய பகுதிகளில் பிடிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 300 கிராம் கோகைன் எனும் போதைப் பொருள், 42 கிராம் எம்.டி.எம்.ஏ என்ற போதைப் பொருள் மற்றும் எல்.எஸ்.டி வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், ஒரு கார், செல்ஃபோன்கள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றையும் உதவி ஆணையர் தலைமையிலான அதிரடிப்படை கைப்பற்றியது. இந்த போதைப் பொருளானது கோவாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் லிம்பா ரெட்டி கூறியதாவது:

போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு அமைப்பு மற்றும் அதிரடிப்படை இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. இதுவரை போதை கடத்தல் தொடர்பாக 13 பேர் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு போதை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

இவர்களுக்கு தெலுங்கு திரையுலகுடனும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான 12 நடிகர், நடிகைகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். 

இதுவரையில் கைதானவர்களில் அமெரிக்க குடியுரிமை பெற்ற டுன்டூ அனீஷ், நாசாவில் பணியாற்றிய விமான மென்பொறியாளர் மற்றும் பிரபலமான தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பட்டதாரிகள் ஆகியோர் அடங்குவர் என்றார்.

இதனிடையே முன்னணி தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் போதைப் பொருள் சிறப்பு புலனாய்வு அமைப்பால் புதன்கிழமை சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com