அமெரிக்காவில் இந்திய விஐபிக்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் தளர்வு: அமெரிக்க எம்.பி. வரவேற்பு

அமெரிக்க விமான நிலையங்கள், துறைமுகங்களில் இந்தியாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள்

அமெரிக்க விமான நிலையங்கள், துறைமுகங்களில் இந்தியாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் தளர்த்தப்பட்டதை அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை (செனட்) உறுப்பினர் மாஸி கே.ஹிரோனா வரவேற்றுள்ளார்.
தனது நம்பிக்கைக்கு உகந்த நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு சோதனைகளை தளர்த்தும் நோக்கில் 'குளோபல் என்ட்ரி' என்ற திட்டத்தை அமெரிக்கா அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும் நாடுகளிடம் இருந்து அந்நாட்டு முக்கியப் பிரமுகர்களின் பட்டியலை அமெரிக்கா பெற்றுக் கொள்ளும்.
அந்தப் பட்டியலில் உள்ள பிரமுகர்கள் அமெரிக்காவுக்கு வரும்போது விமான நிலையங்கள், துறைமுகங்களில் வழக்கமான பாதுகாப்பு கெடுபிடிகள் அவர்களுக்கு இருக்காது.
இதுவரை கனடா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, பனாமா, தென்கொரியா, ஜெர்மனி, சிங்கப்பூர், பிரிட்டன், கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து, ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகள் இப்பட்டியலில் இருந்தன. இப்போது இந்தியாவும் அந்த நாடுகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனை வரவேற்று செனட்டர் ஹிரோனா கூறியுள்ளதாவது:
குளோபல் என்ட்ரி திட்டத்தில் இந்தியா இணைந்துள்ளதால் இந்திய-ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்புறவு வலுப்படும். மேலும், ஹவாய் பகுதிக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
கடந்த ஆண்டில் மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அமெரிக்காவில் அவர்கள் சுமார் 90,000 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளனர் என்றார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்துக்கு முன்பு, இந்தியாவை 'குளோபல் என்ட்ரி' பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று ஹிரோனா தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசை வலியுறுத்தினர் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com