88 டிஎம்சி நீர் கடலில் வீணாகிறது: காவிரி வழக்கில் கர்நாடகம் வாதம்

தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரில் 88 டிஎம்சி நீர் கடலில் வீணாகிறது என காவிரி வழக்கு இறுதி விசாரணையின் போது கர்நாடகம் வாதிட்டது.

தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரில் 88 டிஎம்சி நீர் கடலில் வீணாகிறது என காவிரி வழக்கு இறுதி விசாரணையின் போது கர்நாடகம் வாதிட்டது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை இறுதி விசாரணை நடைபெற்றது.
அப்போது கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் மோகன் காத்தர்கி ஆஜராகி முன்வைத்த வாதம்: விஜயவாடா, ஃபாராக்கா போன்ற டெல்டா பகுதிகளைப் போல காவிரி டெல்டா பகுதியும் சமதளப் பரப்பைக் கொண்டுள்ளது. இயற்கையான நீர்ப்பாசன முறையைக் கொண்டு விவசாயம் செய்ய முடியும். சர்வதேச நீர் சட்டத்தின்படி எந்தவொரு அரசுக்கும் நீரை வீணடிக்க உரிமையில்லை. தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விடும் நீரின் அளவில் ஆண்டுதோறும் சுமார் 88 டிஎம்சி நீர் கடலில் கலக்கும் நிலை உள்ளது. இந்த நீரை முறையாகப் பயன்படுத்தாததற்கு தமிழகத்தைப் பொறுப்பாக்க வேண்டும். மேலும், காவிரி டெல்டா பகுதிகளில் மழைப் பொழிவு அளவு, நிலத்தடி நீர் அளவு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மற்றொரு வழக்குரைஞர் ஷியாம் திவான் வாதிடுகையில், 'தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் போதுமான அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பது தெரிய வந்துள்ளது. 1973-ஆம் ஆண்டு யுஎன்டிபி நடத்திய ஆய்வில் 128.38 டிஎம்சியும், 1974-ஆம் ஆண்டு மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் 64 டிஎம்சியும் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது 20 டிஎம்சி நீர் இருப்பதை தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளதை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. ஆனால், காவிரி நடுவர் மன்ற உத்தரவில் இதுபோன்ற அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை' என்றார்.
இதற்கு தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, உமாபதி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் வாதிடுகையில், 'கர்நாடகம் வாதிடுவதுபோல, காவிரி டெல்டா பகுதியில் பெய்யும் மழை வெள்ளமாக கடலுக்கு சென்று விடுகிறது. மேலும், ஒப்பந்தத்தின்படி நீர்த்தேக்கங்களை கர்நாடகம் கட்ட முடியும். ஆனால், தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய குறைந்தபட்ச நீரை உறுதி செய்ய வேண்டும்' என்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 20) ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com