காவிரி வழக்கு இறுதி விசாரணை ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

காவிரி வழக்கு இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 25) ஒத்திவைத்தது.

காவிரி வழக்கு இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 25) ஒத்திவைத்தது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 6-ஆவது நாளாக புதன்கிழமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதி விசாரணை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு சார்பில் வழக்குரைஞர் ஷியாம் திவான் முன்வைத்த வாதம்:
பயன்படுத்தாத நிலத்தடி நீர் வீணாவதற்கு ஒப்பாகும். மேற்பரப்பு நீர்தான் நிலத்தடி நீராக மாறுகிறது. நாட்டில் விவசாயப் பாசனத்துக்கா 45 சதவீதம் நீர், நிலத்தடியிலிருந்து எடுக்கப்படுவதாக மத்திய நீர் வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.
மழை நீர், மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர் ஆகியவற்றை நீர் பங்கீட்டில் சம அளவாகக் கருத்தில் கொள்ள வேண்டும். 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு விவசாய பாசனத்தில் 56 சதவீதம் அளவுக்கு நிலத்தடி நீர் பயன்பாடு இருந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணா, நர்மதா உள்ளிட்ட நடுவர் மன்றங்களும் நீர் பங்கீட்டில் நிலத்தடி நீரையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) சார்பில் காவிரி டெல்டா பகுதிகளில் முதல் முதலாக நிலத்தடி நீர், மண் பரிசோதனை ஆய்வுகள் 1973-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வை மத்திய நீர் வாரியமும் அங்கீகரித்துள்ளது. 1989-ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 47 டிஎம்சி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கு 30 டிஎம்சி நிலத்தடி நீர் பயன்படுத்தியதை தமிழகமும் நடுவர் மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் தமிழகம் முன்னிலை மாநிலமாக இருந்து வருவதாக மத்திய பாசனக் குழு தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர் மேலாண்மையை தமிழகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் நீர் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக காவிரியிலிருந்து நீர் வழங்கும் விவகாரத்தில் எந்தவொரு ஆய்வு, மதிப்பீடு உள்ளிட்டவற்றை காவிரி நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை. மொத்தத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவால் கர்நாடகம் முழுவதுமாக ஏமாற்றப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, உமாபதி ஆகியோர் வாதிடுகையில், 'காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை கர்நாடகம் மதிப்பதில்லை. அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது' என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், 'காவிரி நடுவர் மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது சாட்சிகளாக உள்ள நிபுணர்கள் எழுதிய புத்தகங்களை ஆதாரங்களாகக் கொண்டாலும், அவற்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நம்ப முடியுமா?.
இந்த விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் பல அம்சங்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதை அறிவோம். மேலும், இந்த விவகாரத்துக்கு சட்டத்துக்குள்பட்ட தீர்வை நோக்கி நகர்வோம்' என தெரிவித்து விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 25) ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com