ஆர்.எஸ்.எஸ். வன்முறையை ஆதரிக்கவில்லை: மன்மோகன் வைத்யா

ஆர்எஸ்எஸ் அமைப்பு, எந்தவித வன்முறையையும் ஆதரிக்கவில்லை என்று அந்த அமைப்பின் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா கூறினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு, எந்தவித வன்முறையையும் ஆதரிக்கவில்லை என்று அந்த அமைப்பின் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா கூறினார்.
நாடு முழுவதும் பசுப் பாதுகாவலர்கள் என்று சிலர் தங்களைக் கூறிக் கொண்டு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.
இந்தச் சூழலில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் மாநாடு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஜம்முவில் வியாழக்கிழமை நிறைவடைந்தது. மாநாட்டின் முடிவில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மன்மோகன் வைத்யா கூறியதாவது:
பசுப் பாதுகாப்பு இயக்கம், நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மக்கள் கொல்லப்படுவது, இதுவே முதல் முறையல்ல. மக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தச் சம்பவங்களை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையுடன் முடிச்சுப் போடுவதற்கு ஊடகங்கள் முயலுகின்றன. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயலுகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருபோதும் வன்முறையை ஆதரித்தது கிடையாது.
பசுப் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்குவதும், அதை வைத்து சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு களங்கம் ஏற்படுத்துவதும் தவறான செயலாகும்.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகளை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்துவதற்குப் பதிலாக, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநாடு, ஜம்முவில் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மூத்த தலைவர்கள் பையாஜி ஜோஷி, தத்தாத்ரேயா ஹோஸபல், கிருஷ்ண கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ்-இன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com