தலித் குடும்பத்துடன் மதிய உணவருந்திய அமித் ஷா

ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த பாஜக இளைஞரணித் தலைவரின் குடும்பத்துடன் அமர்ந்து மதிய உணவருந்தினார்.
தலித் குடும்பத்துடன் மதிய உணவருந்திய அமித் ஷா

ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த பாஜக இளைஞரணித் தலைவரின் குடும்பத்துடன் அமர்ந்து மதிய உணவருந்தினார்.
மூன்று நாள் பயணமாக ராஜஸ்தான் சென்ற அமித் ஷா தனது பயணத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை, ஜெய்ப்பூரில் அந்த மாநில பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து பாஜகவின் இளைஞரணித் தலைவரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான ரமேஷ் பச்சாரியாவின் வீட்டில் மதிய உணவு சாப்பிடச் சென்றார். அங்கு பச்சாரியாவின் குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து அமித் ஷா சாப்பிட்டார். இது குறித்து பச்சாரியா கூறுகையில், "எங்கள் கட்சித் தலைவருக்காக சப்பாத்தி, சாதம், பருப்புக் குழம்பு, அல்வா, கீர் ஆகியவற்றை எனது அம்மா சமைத்திருந்தார்" என்றார்.
அமித் ஷாவுடன், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, கட்சியின் மாநிலத் தலைவர் அசோக் பர்னாமி உள்ளிட்டோரும் உடன் சென்றனர். அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு, பச்சாரியின் வீடு அமைந்துள்ள சுஷில்புரா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுஷில்புரா பகுதியில் தலித் சமூக மக்களும், அடித்தட்டு மக்களுமே அதிகம் வசித்து வருகின்றனர். ஜெய்ப்பூர் நகரின் மையத்தில் மிகவும் குறுகலான தெருக்களைக் கொண்ட அப்பகுதியில், அமித் ஷா போன்ற முக்கியப் பிரமுகர் ஒருவர் வருவது இதுவே முதல் முறையாகும். எனவே, அப்பகுதி மக்கள் தெருக்களிலும், வீட்டு மாடிகளிலும் ஏறி நின்று அமித் ஷாவைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்தனர். பச்சாரியின் வீட்டில் சுமார் அரைமணி நேரம் இருந்த அமித் ஷா, அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், வெளியே கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்து அவர்களின் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து ராஜஸ்தான் மாநில சமூக நீதித்துறை அமைச்சர் அருண் சதுர்வேதி கூறியதாவது:
பாஜகவில் அடிமட்டத் தொண்டராக இருந்து இப்போது மாநில இளைஞரணித் தலைவராக பச்சாரியா வளர்ந்துள்ளார். தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ஒரு தொண்டரை கெளரவிக்கும் வகையில் தேசியத் தலைவர் அவரது வீட்டுக்குச் சென்று சாப்பிட்டார். பச்சாரியாவின் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு அவரது வீட்டுக்குச் செல்லவில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு கூறி வருகின்றன. பாஜகவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com