சீனப் பொருட்களை இந்தியாவால் புறக்கணிக்கவே முடியாது என்கிறது புள்ளிவிவரம்!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட மற்றொரு அம்சம் சீனப் பொருட்களை புறக்கணிப்பது என்பதுதான்.
சீனப் பொருட்களை இந்தியாவால் புறக்கணிக்கவே முடியாது என்கிறது புள்ளிவிவரம்!


ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்ட மற்றொரு அம்சம் சீனப் பொருட்களை புறக்கணிப்பது என்பதுதான்.

இந்தியாவில் உற்பத்தியாகும், உற்பத்தி செய்யக் கூடிய எத்தனையோ பொருட்களை நாம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனையிலும், பயன்பாட்டிலும் வைத்துள்ளோம். அதற்கு உதாரணமாக சீனப் பட்டாசுகளைச் சொல்லலாம்.

நேரடியாக இந்தியாவுக்குள் இறக்குமதியாகி, இந்திய சந்தைகளை ஆக்ரமித்திருக்கும் சீனப் பொருட்களை விட, கள்ளத்தனமாக இந்திய சந்தைக்குள் வரும் சீனப் பொருட்கள் இன்னும் அளவிட முடியாதது.

'சீனப் பொருட்களை புறக்கணிப்போம்' என்ற ஸ்டிக்கருடன் தற்போது சீனப் பொருட்கள் இந்தியாவுக்குள் நுழைவதாகவும் சில வாட்ஸ் அப் செய்திகள் தெரிவிக்கின்றன.  இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

நாம் விஷயத்துக்கு வருவோம், அதாவது, சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை கவலையளிப்பதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தெரிவித்தார்.

அன்னிய நாடு ஒன்றுடன் நமது ஏற்றுமதி குறைவாகவும், அந்த நாட்டின் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதை வர்த்தகப் பற்றைக்குறை என்று அழைக்கின்றனர். சீனாவுடன் நமது ஏற்றுமதி-இறக்குமதி இந்த ரீதியிலேயே அமைந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி-நேரத்தின்போது கூறியதாவது: சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்தியத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு சீனச் சந்தையில் மிகப்பெரிய வாயப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக சீனாவுடன் விவாதித்து வருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தை சீனத் தலைவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மத்திய அரசு முயற்சியெடுத்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்ட 25 நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்தப் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து, சவூதி அரேபியா, இந்தோனேசியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவுடன் வர்த்தகச் சமநிலையைக் கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், பிரிட்டன் உள்ளிட்டவை அடங்கும்.

இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் அளவை விட, இந்திய எல்லையில் பல இடையூறுகளை ஏற்படுத்தி வரும் சீனாவிடம் இருந்து மூன்று மடங்கு அதிகமான பொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம்.

சரி நாம் சீனாவிடம் இருந்து எந்தெந்த பொருட்கள் எவ்வளவு வாங்குகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

சீனாவிடம் இருந்து 2253.70 மில்லியன் டாலர் மதிப்புள்ள தொலைத்தொடர்பு சாதனங்களையும், 1148.87 மில்லியன் டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும், 645.60 மில்லியன் டாலர் மதிப்புள்ள கணினியின் ஹார்டுவேர் பொருட்களையும், 517.32 மில்லியன் டாலர் மதிப்புள்ள இயந்திர உதிரிபாகங்களையும், 472.31 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்கனிக் ரசாயனங்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

அதாவது, 2016-17ம் ஆண்டில் இந்தியா - சீனாவுடனான வர்த்தகத்தில் 51 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இந்தியர்களிடையே சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற கொள்கை வலுவாக வேரூன்றி வந்தாலும் 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கையோடு பதவிக்கு வந்த மோடி அரசும் தற்போது அன்னிய முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பல துறைகளில் 100% அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதும், அனுமதி அளிக்க ஆலோசித்து வருவதும் இந்திய பொருளாதாரத்துக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது படிக்காத பாமரனுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

எல்லையில் மிரட்டி வரும் சீனாவுக்கு எல்லையில் மட்டுமே பதிலடி கொடுக்க வேண்டுமா? நாட்டுக்குள்ளேயும் பதிலடி கொடுக்கக் கூடாதா? என்பதும் அவர்களது கேள்வியாக உள்ளது. பொதுமக்கள் எவ்வளவுதான் சீன பொருட்களை புறக்கணித்தாலும், அது உண்மையிலேயே சீன ஏற்றுமதியை பாதித்ததாக தெரியவில்லை என்பதால், பாமரர்களின் கையில் சேரும் பல பொருட்கள் சீன உற்பத்தியாகவே இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

இதை மக்கள் மட்டுமே மாற்றிவிட முடியாது...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com