டெங்கு, சிக்குன்குன்யாவைவிட மலேரியாவின் தாக்கம் அதிகரிப்பு!  இதுவரை 230 பேர் பாதிப்பு

தலைநகர் தில்லியில் டெங்கு, சிக்குன்குன்யாவைவிட மலேரியாவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்நோயால் இதுவரை 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு, சிக்குன்குன்யாவைவிட மலேரியாவின் தாக்கம் அதிகரிப்பு!  இதுவரை 230 பேர் பாதிப்பு

தலைநகர் தில்லியில் டெங்கு, சிக்குன்குன்யாவைவிட மலேரியாவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்நோயால் இதுவரை 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தில்லியைப் பொருத்தவரை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய்களின் தாக்கம், வழக்கமாக ஜூலை மத்தியில் தொடங்கும். ஆனால், நிகழாண்டில் முன்கூட்டியே இந்த நோய்கள் பரவத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், தில்லியில் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, 3 மாநகராட்சிகளின் சார்பில் தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 22-ஆம் தேதி வரை, மலேரியாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 230. இவர்களில் 16 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். இந்த மாதத்தில் மட்டும் 57 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்குன்குன்யாவால் இதுவரை 195 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 127 பேர் தில்லியைச் சேர்ந்தவர்களாவர். டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 180. இந்த மாதத்தில் மட்டும் 43 பேர் பாதிக்கப்பட்டனர். நகர் முழுவதும் சுமார் 69 ஆயிரம் வீடுகளில் கொசுப் பெருக்கம் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

டெங்குவும், சிக்குன்குன்யாவும் ஏடிஎஸ் ஏஜிப்டி வகை கொசுக்களால் பரவுகின்றன. இவை, நன்னீரில் வளருகின்றன. அனாஃபிலஸ் வகை கொசுக்களால் மலேரியா பரவுகிறது. இவை, நன்னீரிலும் கலங்கிய நீரிலும் பெருகுகின்றன. இந்த நோய்கள் தொடர்பாக துண்டுப் பிரசுரங்கள் மூலமும், வாகனங்களில் சென்று ஒலிப் பெருக்கி மூலமும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மழைக் காலம் தொடங்கியிருப்பதால், கொசுக்களின் பெருக்கமும் அதிகரிக்கும். இதனால், மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் எதிர்வரும் நாள்களில் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தில்லியில் கடந்த ஆண்டு சிக்குன்குன்யாவால் 12,221 பேரும், டெங்குவால் 9,749 பேரும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com