பாலஸ்தீனத்தை மோடி புறக்கணித்தாரா?: மாநிலங்களவையில் காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனத்தை வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளது குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி
பாலஸ்தீனத்தை மோடி புறக்கணித்தாரா?: மாநிலங்களவையில் காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனத்தை வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளது குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் இருந்தே பாலஸ்தீனத்தின் எதிரி நாடாக இருப்பது உலகம் அறிந்த விஷயம். இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது.
எனினும், இப்போது இந்தியா இருநாடுகளையும் சமமாகவே கருதுகிறது. இந்தியத் தலைவர்கள் அந்த இருநாடுகளுக்கும் பயணம் செய்வது வழக்கம். ஒருநாட்டுக்கு சென்றுவிட்டு மற்றொரு நாட்டை புறக்கணிக்கும் வழக்கம் இதுவரை இருந்தது இல்லை.
ஆனால், இம்மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, பாலஸ்தீனத்துக்கு செல்லவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். விதி எண் 267-ன் கீழ் மாநிலங்களவையில் மற்ற நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு, பாலஸ்தீனத்தை மோடி புறக்கணித்தது குறித்தும், இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் மோடி கூறிய கருத்து குறித்தும் விவாதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
அவையில் ஆனந்த் சர்மா மேலும் கூறியதாவது:
மோடி பாலஸ்தீனம் செல்வதை வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்குப் பிறகு செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளின் தலைவர்களை நெதன்யாகு சந்தித்துப் பேசினார். அப்போது, 'இஸ்ரேலிடம் இருந்து நவீன தொழில்நுட்பங்களை முக்கியமாக தண்ணீர் தொடர்பான தொழில்நுட்பத்தைப் பெற இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. எனவேதான், அந்நாட்டு பிரதமர் மோடி பாலஸ்தீனம் செல்வதை தவிர்த்தார். மேலும், என் நாட்டு மக்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது; அதை பாலஸ்தீனத்தால் தர முடியாது என்று மோடி தன்னிடம் கூறியதாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் மைக் மூலம் பதிவும் செய்யப்பட்டுள்ளது என்றும் இஸ்ரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஒருமைப்பாட்டுக்கும், உரிமைக்கும் இந்தியா எப்போதும் துணை நிற்க வேண்டும். பாலஸ்தீனத்தை வேண்டுமென்று புறக்கணித்தது மட்டுமன்று, அது குறித்து இஸ்ரேல் பிரதமரிடமும் மோடி பேசியுள்ளார். எனவே, இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று ஆனந்த் சர்மா வலியுறுத்தினார்.
ஆனால், ஆனந்த் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், 'இஸ்ரேல் பிரதமருடன் மோடி தனிப்பட்ட முறையில் பேசியது, அவர்கள் இருவரது பதவியின் கண்ணியத்துடன் தொடர்புடையது' என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோனி, மோடி திட்டமிட்டு பாலஸ்தீனத்தைப் புறக்கணித்தது சிறிய விஷயமல்ல. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த குரியன், மத்திய அரசு அளிக்கும் பதிலுக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நான் உத்தரவிட முடியாது. இதற்கு பதிலளிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com