வன்முறையற்ற சமுதாயம் நாட்டின் பலம்: பிரணாப் முகர்ஜி உரை

வன்முறையில்லாத சமுதாயமே நாட்டின் பலம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்து வகை வன்முறைகளில் இருந்தும் நாம் விடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்
பிரணாப் முகர்ஜியின் உரைகள் அடங்கிய தொகுப்பின் 4-ஆவது தொகுதி வெளியீட்டு நிகழ்வில், முதல் பிரதியை பிரணாப் முகர்ஜிக்கு வழங்கும் பிரதமர் மோடி.
பிரணாப் முகர்ஜியின் உரைகள் அடங்கிய தொகுப்பின் 4-ஆவது தொகுதி வெளியீட்டு நிகழ்வில், முதல் பிரதியை பிரணாப் முகர்ஜிக்கு வழங்கும் பிரதமர் மோடி.

வன்முறையில்லாத சமுதாயமே நாட்டின் பலம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்து வகை வன்முறைகளில் இருந்தும் நாம் விடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பசுப் பாதுகாப்பு அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்களாலும், ஜம்மு-காஷ்மீரில் தொடரும் வன்முறைச் சம்பவங்களாலும் நாட்டில் பதற்றம் நிலவும் நிலையில், பிரணாப் முகர்ஜி இவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
புதிய குடியரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ள ராம்நாத் கோவிந்திடம் தனது பொறுப்புகளை பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கவுள்ளார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் என்ற முறையில் கடைசியாக, நாட்டு மக்களுக்கு பிரணாப் முகர்ஜி தொலைக்காட்சியின் மூலம் திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கருணை, இரக்கம் ஆகியவையே நமது நாட்டின் உண்மையான கட்டுமானம் ஆகும். ஆனால் ஒவ்வொரு நாளும், நம்மைச் சுற்றி, வன்முறைகள் அதிகரித்து வருவதையே காண முடிகிறது. வன்முறையின் பின்னணியில் இருள், அச்சம், அவநம்பிக்கை ஆகியவைகளே உள்ளன.
வன்முறையில்லாத சமூகமே நமது நாட்டின் பலமாகும். இதை கருத்தில் கொண்டு, உடல் ரீதியிலான மோதல், வாய்த்தகராறு போன்ற அனைத்து வகை வன்முறையில் இருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். வன்முறையில்லாத சமூகத்தால் மட்டுமே, நாட்டின் ஜனநாயக நடவடிக்கைகளில் அனைத்துப் பிரிவு மக்களின் பங்களிப்பையும் உறுதி செய்ய முடியும்.
அஹிம்சையின் சக்தியால்தான், இரக்கம் மற்றும் அக்கறை கொண்ட சமூகத்தை கட்டமைக்க முடியும். நமது நாடானது, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத் தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
இந்தியா என்பது வெறும் புவியியல் சார்ந்த அமைப்பு கிடையாது. பல்வேறு சித்தாந்தங்கள், தத்துவம், அறிவுகூர்மை, கைவினை கண்டுபிடிப்பு, அனுபவம் உள்ளிட்ட வரலாறுகளை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது.
நமது நாட்டின் பன்முகத்தன்மையானது, பல்வேறு சித்தாந்தங்களை பல நூறாண்டுகளாக கிரகித்து கொண்டதால் வந்தது ஆகும்.
நமது நாட்டில் இருக்கும் பல்வேறு கலாசாரம், நம்பிக்கை, மொழிகள் ஆகியவை உலகின் பிற நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு தனிச்சிறப்பைத் தந்துள்ளது.
சில விவகாரங்களில் நமக்குள் கருத்து மோதல், கருத்தொற்றுமை அல்லது கருத்து வேற்றுமை ஏற்படலாம். இருப்பினும், மக்களுக்கு வேறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை மறுக்கக் கூடாது. அப்படி செய்தால், நமது நாட்டின் அடிப்படை குணாதிசயத்தில் இருந்து விலகிச் சென்றுவிடுவோம்.
நம்பிக்கையின் அடிப்படையில்தான் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகத்தை ஏற்படுத்த முடியும் என்பது மகாத்மா காந்தியின் கருத்தாகும். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என்பதே அவரின் விருப்பமும் ஆகும். மேலும், ஏழைகள் நலன்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார்.
சரிசமமான சமூகம் என்பது அனைத்து தரப்பு மக்களின் செல்வநிலையும் சமமாக இருப்பதுதான். ஏழைகளுக்கு அதிகாரம் கிடைப்பது, அரசு கொள்கைகளின் பயன்கள் அவர்களைச் சென்றடைவது ஆகியவற்றை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நாட்டில் இருந்து வறுமையை முழுவதும் ஒழிப்பதன்மூலமே, மக்களுக்கு நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்தி தர முடியும். அதேநேரத்தில், நீடித்த வளர்ச்சிக்காக, நமது பூமியிலுள்ள இயற்கை ஆதாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இயற்கையை நாம் பாதுகாத்தால், அது நமக்கு பல்வேறு பலன்களை தரும். ஆனால், அதற்கு அதிகளவு பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தினோம் எனில், இயற்கை தனது சீற்றத்தை வெளிப்படுத்தத் தொடங்கும். நமது நாட்டு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் விவசாயிகள், தொழிலாளர்களுடன் இணைந்து மண்ணின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்.
சிறந்த எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில், வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பானது, பிறகு மீண்டும் நமக்கு கிடைக்காது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த 5 ஆண்டுகாலக் கட்டத்தில், மனிதநேயம், மகிழ்ச்சியான நகரத்தை ஏற்படுத்த முயற்சித்தோம். கொண்டாட்டம், ஆரவாரம், நல்ல சுகாதாரம், பாதுகாப்பு, சாதகமான நடவடிக்கை ஆகியவற்றில்தான் மகிழ்ச்சி உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டோம்.
புன்னகைப்பதற்கும், இயற்கையுடன் சேர்ந்திருப்பதற்கும், மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் கற்றுக் கொண்டோம். பின்னர், அந்த அனுபவத்தை எங்கள் அருகில் இருக்கும் கிராமங்களுடன் பகிர்ந்து கொண்டோம். இந்தப் பயணம் தொடரும்.
நாளை (செவ்வாய்க்கிழமை) உங்களுடன் நான் பேசினேன் எனில், அந்த பேச்சானது, குடியரசுத் தலைவரின் பேச்சாக இருக்காது. சாதாரண இந்திய பிரஜையினுடையாகத்தான் இருக்கும். மேலும், மகிழ்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், உங்களைப் போன்று நானும் யாத்ரீகராகவே இருப்பேன் என்றார் பிரணாப் முகர்ஜி.
பிரணாப் சிறந்த வழிகாட்டி: பிரதமர் மோடி புகழாரம்!
புது தில்லி, ஜூலை 24: குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற வழிகாட்டுதல்கள் எனக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
பிரணாப் முகர்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் அடங்கிய தொகுப்பின் 4-ஆவது தொகுதி வெளியீட்டு நிகழ்வு, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது:
பிரணாப் முகர்ஜி, அதீத அறிவுபெற்ற எளிமையான மனிதர். குடியரசுத் தலைவராக அவர் பதவி வகிக்கும்போது, குடியரசுத் தலைவர் மாளிகை (ராஷ்டிரபதி பவன்), உலக அரங்கமாக (லோக் பவன்) மாறியது.
அவரிடம் அலுவல் தொடர்பான விஷயங்களை எப்போது விவாதித்தாலும், எனக்கு சரியான முறையில் வழிகாட்டுவார். மேலும், ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் அவர் தெரிவிப்பார்.
பிரணாப் முகர்ஜிடம் இருந்து கிடைக்கப்பெற்ற வழிகாட்டுதல்கள், எப்போதும் எனக்கு உதவிகரமாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனைவரும் இதையே உணர்வார்கள் என்றார் பிரதமர் மோடி.
பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. புதிய குடியரசுத் தலைவராக, பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com