பூர்வா எக்ஸ்பிரஸில் ’பல்லி பிரியாணி’: சிஏஜி ஆய்வறிக்கை அம்பலம்!

ஹெளவுரா-தில்லி இடையேயான பூர்வா விரைவு ரயிலில், பயணி ஒருவருக்கு இன்று காலை வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி இறந்து கிடந்தது
பூர்வா எக்ஸ்பிரஸில் ’பல்லி பிரியாணி’: சிஏஜி ஆய்வறிக்கை அம்பலம்!


புதுதில்லி: ஹெளவுரா-தில்லி இடையேயான பூர்வா விரைவு ரயிலில், பயணி ஒருவருக்கு இன்று காலை வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சில தினங்களாக ரயில்வேயில் உள்ள கேட்டரிங் சேவைகளில் நடந்துவரும் பல்வேறு தவறுகளை சுட்டிக் காட்டியதுடன், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் பழச்சாறுகள், பிஸ்கட், பால், தண்ணீர் மற்றும் உணப்பொருட்கள் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது சிஏஜி.

இந்நிலையில், இன்று காலை பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனப்பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் சந்தோளி அருகே சென்று கொண்டிருந்தபோது ஐஆர்சிடிசியால் தயாரிக்கப்பட்ட பிரியாணி உணவை வாங்கி பிரித்துள்ளார். அப்போது, அந்த பிரியாணி பொட்டலத்தில் பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்தார்.

இதையடுத்து உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டார்.

இது குறித்து பயணி கூறுகையில், மொகாமா பகுதியில் உணவு வாங்கி திறந்தேன். அப்போது, அதில் பல்லி இறந்து கிடந்தது குறித்து டிடிஇ, கேன்டின் மேலாளர் புகார் அளித்தேன். பின்னர் டுவிட்டர் மூலம் ரயில்வே அமைச்சருக்கு தகவல் அளித்தேன். இருப்பினும் அதிகாரிகள் தாமதமாக வந்து மருந்து அளித்தனர் என்று தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் ரயிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதுகுறித்து தானாபூர் டிவிஷன் துணை ரயில்வே மேலாளர் கிஷோர் குமார் கூறுகையில், தானாப்பூர் டிவிஷனில் ஆய்வு நடந்தது. அவருக்கு உரிய மருந்து வழங்கப்பட்டது. விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அண்மையில் மத்திய கணக்கு தணிக்கைத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பயணி ரயில்வே அமைச்சருக்கு டுவிட்டரில் புகார் தெரிவித்த பிறகு இந்த சம்பவம் விரைவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைகளை சரிசெய்யும் முயற்சியில், இந்திய ரயில்வே 48 மணிநேரத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் உணவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் கேட்டரிங் ஒப்பந்தம், மே 15, 2014 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஆர்கே அசோசியேட்ஸ் வழங்கப்பட்டது. டுவிட்டர் புகாரைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டுவிட்டரில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.7.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com