திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலதிபர் சாவு

கிழக்கு தில்லியின் மயூர் விஹார் பகுதியில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்தார்.
திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலதிபர் சாவு

கிழக்கு தில்லியின் மயூர் விஹார் பகுதியில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனில் குமார் குப்தா (54) என்ற அந்த தொழிலதிபர், மயூர் விஹார் பகுதியிலுள்ள பூங்காவுக்கு திங்கள்கிழமை மாலையில் நடைபயிற்சிக்காக சென்றிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. அங்கு திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழிக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்த  குப்தா,  உதவிகேட்டு கத்தினார்.

அக்கம்பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை சிகிச்சைக்கு அனுமதிக்க அந்த மருத்துவமனை மறுத்துவிட்டது. பின்னர், வேறொரு மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், குப்தா ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக அந்த பூங்காவின் சுற்றுப் புற பகுதிகளில் தண்ணீர் தேங்கி,  சேறும் சகதியுமாக இருந்துள்ளது. அதன் காரணமாக நிலை தடுமாறி, சாக்கடை குழிக்குள் குப்தா விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், பொதுப் பணித் துறையினரின் அலட்சியமே குப்தாவின் உயிரை பறித்துவிட்டது என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில்,  "பொதுவாக பாதாள சாக்கடை முழுவதும் கான்கிரீட்டால் மூடப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் தூய்மை பணிக்காக திறப்புகள் இருக்கும்.  சில இடங்களில் இரும்பு கம்பிகளை எடுப்பதற்காக கான்கிரீட்டை சில சமூக விரோதிகள் உடைத்துவிடுகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையில் பல புகார்கள் அளித்துள்ளோம்' என்றனர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com