பான் கார்டு இருந்தும் வருமான வரி செலுத்தாத 6.83 லட்சம் நிறுவனங்கள்: மாநிலங்களவையில் தகவல்

பான் கார்டு இருந்தும் 6.83 லட்சம் நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பான் கார்டு இருந்தும் 6.83 லட்சம் நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அளித்த பதில்:
பான் கார்டு இருந்தும் 2016-17-ஆம் நிதியாண்டில் 6.83 லட்சம் நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. கடந்த 2012-13-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4.09 லட்சமாக இருந்தது. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்கள் அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் தில்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மும்பை உள்ளது. இப்பட்டியலில் தமிழகம், மேற்கு வங்கம் ஆகியவை முறையே 3,4-ஆவது இடத்தில் உள்ளன என்றார் அவர்.
சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு நமது சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் விலை குறைந்துள்ளது. ஏனெனில் அவற்றின் மீது குறைவான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் ஜிஎஸ்டி சாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில்:
மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் போது திரும்பப் பெறப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எண்ணும் பணியை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் பழைய ரூபாய் நோட்டுகள் முழுமையாக எண்ணப்பட்டு அவற்றின் மதிப்பு என்ன என்பது தெரிவிக்கப்படும்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித்துறையினர் 1000-க்கும் மேற்பட்ட சோதனைகளையும், ஆய்வுகளையும் நடத்தினர். அதில் ரூ.513 கோடிக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளும், ரூ.110 கோடிக்கு மேல் புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மின்னணுப் பரிமாற்றம் அதிகரிப்பு: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதும் அதிகரித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக கள்ள நோட்டுகளை அச்சடிக்க முடியாது. எனவே, கள்ள நோட்டுகள் குறைந்துவிட்டன. அப்படியே வந்தாலும் அவை எளிதில் அடையாளம் காணப்படுகின்றன.
நாட்டில் மொத்தம் 133 நிறுவனங்கள் ரூ.500 கோடிக்கும் அதிகமான வரியைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் நிலுவையில் வைத்துள்ள வரியின் மதிப்பு ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 704 கோடியாகும் என்றார்.
ராணுவ நிலம் ஆக்கிரமிப்பு: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே மாநிலங்களவையில் கூறியதாவது:
நாடு முழுவதும் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான10,220 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் குடிசைவாசிகள் மட்டுமல்லாது மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் பாதுகாப்புத் துறை நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com