ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்: சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்வதாக அறிவிப்பு

வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என்றும் அந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்: சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்வதாக அறிவிப்பு

வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என்றும் அந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரை நிகழ்த்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. பொதுச் சபையின் 72-ஆவது வருடாந்திரக் கூட்டம் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ள உலக நாடுகளின் தலைவர்களது பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 23-ஆம் தேதி காலை நடைபெறும் அமர்வில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுப் பேசுகிறார் என்ற தகவல் தெரிய வருகிறது. இதன் மூலம் இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்பதும் தெளிவாகியுள்ளது. சுஷ்மா கடந்த ஆண்டும் (2016) ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஐ.நா. பொதுச் சபையில் முதல் உரையை நிகழ்த்த உள்ள அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் மீதே அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. அவர் செப்டம்பர் 19-ஆம் தேதி உரையாற்றவுள்ளார். ஐ.நா. பொதுச் சபை விவாதத்தில் பிரேசில் முதலாவதாகவும், அமெரிக்கா இரண்டாவதாகவும் உரை நிகழ்த்துவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் தலைவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் செப்டம்பர் 21-இல் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பை முதல் முறையாகச் சந்தித்துப் பேசுவது இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.
ஐ.நா. பொதுச் சபையில் நரேந்திர மோடி கடந்த 2014-இல் தனது முதல் உரையை ஆற்றியிருந்தார். அதைத் தொடர்ந்து 2015-இல் பொதுச்சபைக் கூட்டத்துக்கு முன் நடைபெற்ற உயர்நிலை நீடித்த வளர்ச்சி உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இந்த மாநாட்டில்தான் 2030-ஆம் ஆண்டு நீடித்த வளர்ச்சி செயல்திட்டத்தை உலகத் தலைவர்கள் நிறைவேற்றினர். 169 இலக்குகளை எட்டுவதற்கான, உலக நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான தீர்மானம் அதுவாகும்.
தவிர, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நடத்திய ஐ.நா. அமைதிகாப்பு உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். அப்போது ஐ.நா. அமைதி காப்புப் படைக்கு இந்தியா கூடுதலாக 850 படைவீரர்களை அனுப்பி வைக்கும் என்று மோடி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com