திருமணப் பதிவை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு: மக்களவையில் தகவல்

திருமணத்தைப் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

திருமணத்தைப் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், திருமண பதிவுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
திருமணம், ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளில் பெண்கள் தேவையற்ற பாதிப்புகளுக்கு ஆளாவதை தடுப்பதற்காக, திருமணப் பதிவை கட்டாயமாக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். எனினும், திருமணத்தைப் பதிவு செய்வதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை.
உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில், மத வேறுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் திருமணப் பதிவை கட்டாயமாக்க அறிவுறுத்தியுள்ளது என்று தனது பதிலில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக, திருமண மோசடிகளில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக திருமணப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மத்திய சட்ட ஆணையம் அண்மையில் பரிந்துரைத்தது. இதற்காக கடந்த 1969-ஆம் ஆண்டைய பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தில் ஒரு பிரிவை சேர்க்க வேண்டும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com