பிரச்னையை பெரிதுபடுத்த அமெரிக்கா முயற்சி: சிக்கிம் விவகாரத்தில் சீனா குற்றச்சாட்டு

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை அமெரிக்கா பெரிதுப்படுத்த முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை அமெரிக்கா பெரிதுப்படுத்த முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ' சீன எல்லைக்குள் நுழைந்ததை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியா அப்பகுதியில் இருந்து மனசாட்சிப்படி தனது துருப்புகளைத் திரும்பப் பெற வேண்டும்' என்றார்.
இந்நிலையில், டோகலாம் விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் வாங்கின் கருத்துகள் அதிகாரபூர்வமானவை. அவை சீனாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன. இதற்கு மேல் நான் விளக்கிக் கூறுவதற்கு ஏதுமில்லை.
டோகலாம் பகுதியில் இந்தியத் துருப்புகள் அத்துமீறி நுழைந்துள்ளதை நான் பல முறை கூறியுள்ளேன். அங்கிருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெறாத பட்சத்தில் அந்நாட்டுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை எதையும் சீனா நடத்தாது என்றார் அவர்.
'பிரச்னையைப் பெரிதுபடுத்த அமெரிக்கா முயற்சி': இதனிடையே, சிக்கிம் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையைப் பெரிதுபடுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக சீன அரசு ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசால் நடத்தப்படும் குளோபல் டைம்ஸ் நாளிதழில் புதன்கிழமை ஒரு கட்டுரை வெளியானது. 'இந்திய-சீன மோதலைத் தூண்டிவிடுவது அமெரிக்காவுக்கு பலன் தராது' என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 5 வாரங்களுக்கும் மேலாக (சிக்கிமின் டோகலாம் பகுதி தொடர்பாக) எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. தற்போது மற்ற சில நாடுகள் தலையிட்டு, பிரச்னையைப் பெரிதுபடுத்த முயற்சிக்கின்றன. எல்லைப் பிரச்னையில் சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தியாவுக்கு உதவுமாறும், சீனாவுக்கு எதிராக உலகை அணிதிரளச் செய்யுமாறும் அமெரிக்க அரசை அந்நாட்டு ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதுவரை அமெரிக்க-இந்திய உறவுகள் விஷயத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் அரசு சிறிய அளவிலேயே கவனம் செலுத்தியுள்ளது. அந்த நாடுகளிடையே வர்த்தகம், குடியுரிமை போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.
தென்சீனக் கடல் விவகாரத்தில் குறுக்கிட்டு தந்திரங்களை மேற்கொண்டதைப் போல் சிக்கிம் விவகாரத்திலும் தலையிடலாம் என்று அமெரிக்கர்கள் நினைக்கலாம். ஆனால், அந்த கடல்சார்ந்த பிரச்னையில் அமெரிக்காவுக்கு என்ன பலன் கிடைத்தது? அதேபோல் சீன-இந்திய மோதலைப் பெரிதுபடுத்துவதாலும் அமெரிக்காவுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அமெரிக்கத் தலையீடு காரணமாக சீனா தனது பிரதேச எல்லையைப் பாதுகாப்பதைக் கைவிட்டு விடாது.
எங்கெல்லாம் பூசல்கள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அமெரிக்கா நுழைகிறது. ஆனால், பிரச்னைகளைத் தீர்க்க அந்த நாடு பாரபட்சமற்ற நிலைப்பாட்டை அரிதாகவே எடுக்கிறது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ராணுவ ரீதியிலான மோதலைத் தூண்டிவிடும் முயற்சியில் மேற்கத்திய நாடுகளில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் தங்களுக்கு எந்தச் செலவுமின்றி ராணுவ ரீதியிலான பலன்களை அவை நாட முடியும்.
அரை நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் மூண்டது. அதன் பின்னணியில் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் கரங்கள் இருந்தன. போர் மூள்வதை சீனாவும் விரும்பவில்லை; இந்தியாவும் விரும்பவில்லை.
டோகலாம் பிரச்னையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய அமைச்சர் ஜூலி பிஷப் கூறியுள்ளார். அவர் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு மறைமுக ஆதரவை அளிக்க முயற்சிக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com