மன்றம் வென்றோம், விரைவில் மக்கள் மனங்களையும் வெல்வோம்: நிதீஷ் குமார்

பிகார் சட்டப்பேரவையில் தனது பெருன்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்க வைத்து மீண்டும் முதல்வராக நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தேர்வுசெய்யப்பட்டார்.
மன்றம் வென்றோம், விரைவில் மக்கள் மனங்களையும் வெல்வோம்: நிதீஷ் குமார்

பிகார் மாநிலத்தில் கடந்த 2 தினங்களாக அரசியல் சூழல் மிகவும் பரபரப்படைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. 

அந்தக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஜேடியு கட்சியின் நிதீஷ் குமார் முதல்வரானார். ஆர்ஜேடி கட்சியில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றார். கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்த பாஜக, ஜேடியு கூட்டணி இத்துடன் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில், ரயில்வே உணவக ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி மீது சிபிஐ விசராணை நடத்தியது. இதையடுத்து இந்த மகா கூட்டணியில் விரிசல் விழத்தொடங்கியது. தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதீஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

அதுபோல நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை பதவி விலக முடியாது என லாலு தரப்மபில்று மறுக்கப்பட்டது. இதனால் இவ்விரு கட்சிகள் இடையே மிகப்பெரிய பனிப்போர் தொடங்கியது. பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் கடந்த புதன்கிழமை திடீரென விலகினார். 

இதன்பின்னர் இரு தலைவர்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து பாஜகவுடன் மீண்டும் தனது நட்பை புதுப்பித்த நிதீஷ், அவர்களுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். 

பிகார் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெருன்பான்மையை நிரூபிக்க 123 இடங்கள் தேவை. எனவே, ஜேடியு 71 உறுப்பினர்கள் மற்றும் பாஜக 53 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்து ஆட்சியை தக்க வைத்தனர். 131 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராகப் பதவியேற்றார். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசி நிதீஷ் குமார் கூறியதவாது: 

பிகார் மக்களின் நலனுக்காக மட்டுமே இந்த அரசு நடைபெற வேண்டும் என நாங்கள் தேர்வுசெய்யப்பட்டோம். அந்தப் பணியை சிறப்புடன் மேற்கொள்வதில்
மட்டும் தான் எனது முழு கவனம் உள்ளது. மகா கூட்டணியின் தர்மத்தை நான் ஒருபோதும் மீறியதில்லை. 

அதில் ஏற்பட்ட அத்தனை சிக்கல்களையும் சரிசெய்து கொண்டு தான் இருந்தேன். ஊழல் குற்றச்சாட்டுக்களில் தேஜஸ்வி இதுவரை தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறவில்லை. நான் அவரின் விளக்கத்தை மட்டுமே கேட்டேன். தற்போது பொறுப்பேற்று இருக்கும் இந்த அரசு, பிகார் மக்களின் நலனுக்கான அரசாக செயல்படும். 

எந்த நிலையிலும் என்னால் ஊழலை அனுமதிக்க முடியாது. தவறுகளையும், ஊழலையும் மூடி மறைப்பதற்காக சிறுபான்மையினர் அரசியலை பயன்படுத்துவது முற்றிலும் தவறான செயலாகும். இதுபோன்ற ஊழல்வாதிகளை எங்களால் எப்போதும் மன்னிக்க முடியாது. 

இன்று நாங்கள் மக்கள் மன்றத்தில் வென்று ஆட்சியமைத்துள்ளோம். விரைவில் பிகார் மக்களின் மனங்களையும் வெல்வோம். ஊழல் மற்றும் பேராசையில்
இருந்து இன்று எங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com