அஜித் தோவால் - சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு: எல்லையில் படைகள் வாபஸ் ஆகுமா?

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், சீன தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜெய்சியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அஜித் தோவால் - சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு: எல்லையில் படைகள் வாபஸ் ஆகுமா?

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், சீன தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜெய்சியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, சிக்கிம் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இருநாட்டுப் படைகளும் வாபஸ் பெறப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் இருநாள் மாநாடு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை தொடங்கியது. இது தொடர்பாக சீன அரசுப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை, சீன தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜெய்சி சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு விவகாரம், சர்வதேசப் பிரச்னைகள், பிராந்திய விவகாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இரு அதிகாரிகளும் பேசினர்.
மேலும், பிரிக்ஸ் அமைப்பின் பிற உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்களையும் யாங் ஜெய்சி சந்தித்துப் பேசினார் என்று அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையே சிக்கிம் மாநிலம் டோகா லா பகுதியை மையமாக வைத்து பிரச்னை நிலவி வருகிறது. எல்லையில் இருநாட்டு ராணுவமும் கடந்த சில வாரங்களாக முகாமிட்டுள்ளன.
எனினும், சிக்கிம் மாநில எல்லை விவகாரம் குறித்து, எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்தும் அஜித் தோவாலும், யாங் ஜெய்சியும் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரத்தை அந்த பத்திரிகை வெளியிடவில்லை.
தோவால்-யாங் ஜெய்சி சந்திப்பில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்களை இந்தியத் தரப்பு அதிகாரிகளும் தெரிவிக்கவில்லை. இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தொடர்பாக சிறப்பு திட்டத்தை உருவாக்கும் குழுக்களில், தோவாலும், யாங் ஜெய்சியும் உறுப்பினர்களாக உள்ளனர்.
வரி ஒப்பந்தம் கையெழுத்து: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே வரி விதிப்பில் ஒத்துழைப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இதில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 5 நாடுகளைச் சேர்ந்த வரி விதிப்புத் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டனர். உலக மக்கள்தொகையில் 42 சதவீதம் பேர் பிரிக்ஸ் நாடுகளில்தான் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு 12 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதிபருடன் சந்திப்பு: அஜித் தோவால், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசவுள்ளார். முன்னதாக, சீன பயணத்தின்போது, அந்நாட்டு அதிபரை அஜித் தோவால் சந்திப்பாரா? இல்லையா? என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் 5 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் சீன அதிபரை வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளனர். அப்போது ஜீ ஜின்பிங்கை அஜித் தோவாலும் சந்திக்கவுள்ளார் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிக்ஸ் அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு, இரு நாள்கள் நடைபெறவுள்ளது. மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரச்னையின் பின்னணி: சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, பூடான், திபெத் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் டோகா லா பகுதி உள்ளது. இதை டோகாலாம் என்று பூடானும், டோங்லாங் என்று சீனாவும் அழைக்கின்றன. இதில் பெரும் பகுதி இந்தியக் கட்டுப்பாட்டிலும், சிறிய பகுதி பூடான் கட்டுப்பாட்டிலும் உள்ளது. தங்கள் பகுதியை இந்திய ராணுவம் பாதுகாக்க பூடான் ஏற்கெனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
திபெத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் பகுதியாக அறிவித்துவிட்ட சீனா, டோங்லாங் பகுதிக்குள் அங்கு அத்துமீறி நுழைந்து சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அண்மையில் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய ராணுவம் அமைத்திருந்த பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். எனினும், அவர்களை முன்னேறவிடாமல் இந்திய ராணுவம் தடுத்து விட்டது. கூடுதலாக இந்திய வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சீனத் தரப்பு இந்தியாவைக் குற்றம்சாட்டுவகையிலும், போர் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசி வருகிறது. மேலும், எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவித்ததுடன், போர் பயிற்சியையும் நடத்தியது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்திய-சீன உறவில் உரசல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இரண்டு நாடுகளுக்கிடையேயான பிரச்னைகள் மேலம் வலுவடைவதும் இரு தரப்புக்குமிடையே சந்தேகங்கள் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்திய மாநிலம் ஒன்றை தனிநாடாக ஆதரவு தெரிவிப்போம் என்று கூறி பிரச்னையின் தீவிரத்தை சீனா அதிகரித்தது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்தியா-சீனா-பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தை தன்னிச்சையாக மாற்றி அமைக்க சீனா முயற்சிக்கிறது.
எல்லை விவகாரத்தைப் பேசித்தான் தீர்க்க வேண்டும். பேச்சு நடத்துவதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது. எல்லையில் குவித்துள்ள ராணுவ வீரர்களை இரு தரப்புமே முதலில் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஆனால், இந்தியப் படைகள் திரும்பப் பெற்றால்தான் பேச்சு நடத்த முன்வருவோம் என்று சீனா கூறிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com